மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை முற்றிலும் கைவிடுக..! கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்.

மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை முற்றிலும் கைவிடுக..!  கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்.

மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை முற்றிலும் கைவிட வலியுறுத்தி கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு சிபிஐ (எம்) தீர்மானம்:  

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் 2023 ஜூன் 6, 7 ஆகிய தேதிகளில் சென்னையில் மத்தியக்குழு உறுப்பினர் பி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ. வாசுகி, மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

இக்கூட்டத்தில் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை முற்றிலும் கைவிட வலியுறுத்தி கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு சிபிஐ (எம்) தீர்மானம் ஒன்றை வெளியிட்டது. 

அதன் விவரங்கள் பின்வருமாறு:-  

' கர்நாடக மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதனைத் தொடர்ந்து பாஜக அல்லாத அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டிய அரசியல் தேவை நாட்டின் மீது அக்கறையுள்ளவர்களின் முன்னால் உள்ளது. ஆனால், இது குறித்தெல்லாம் கவலைப்படாமல் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் திரு டி.கே.சிவக்குமார் அவர்கள் தானடித்த மூப்பாக காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டப்படும் என்று அறிவித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

                இது தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதை அமைச்சர் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. மற்றொன்று, தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் இப்படிப்பட்ட கட்டுமானப் பணிகளை காவிரியில் மேற்கொள்ள முடியாது என்று காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. காவிரி நடுவர் மன்ற விவாதத்தின் போதோ, உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு விசாரணையின் போதோ கர்நாடக அரசு மேகதாது அணை பிரச்சனையை எழுப்பவில்லை. இறுதித் தீர்ப்பில் பெங்களூர் நகர குடிநீர் தேவையும் கணக்கில் கொண்டே காவிரி நீர் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் புறக்கணித்துவிட்டு கர்நாடகத்தில் ஏற்கனவே இருந்த பாஜக அரசு மேகதாது அணைப் பிரச்சனையை புதிதாக எழுப்பி தமிழ்நாட்டிற்கு விரோதமான நிலையினை மேற்கொண்டது. இதேபோக்கில் புதிதாக பதவியேற்றுள்ள கர்நாடக காங்கிரஸ் அரசும் மேகதாது அணை பிரச்சனையை கிளப்புவது நியாயமற்றது, நேர்மையற்றது, உச்சநீதிமன்றம் மற்றும் காவரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புகளுக்கு விரோதமானது.

                எனவே, கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, மேகேதாட்டுவில் அணை கட்டுவது உள்ளிட்ட தமிழ்நாட்டிற்கு விரோதமான நடவடிக்கைகளை முற்றிலும் கைவிட வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது'. 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com