மருத்துவ துறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க செய்யவும், தகுதியுடைய மாணவர்கள் அத்துறையில் சேரும் வகையிலும் மத்திய அரசு நீட் தேர்வினை கொண்டு வந்தது. ஆனால், இத்தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது. இதுதவிர மாணவர்கள் பலரும் நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். இதில் வடமாநிலத்தவர் பலருமே தேர்ச்சிப்பெற்று மருத்துவ சீட்களை பெற முடிகிறது. இதன்காரணமாக நீட் தேர்வினை ரத்து செய்யக்கோரி தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
நடப்பாண்டும் செப்டம்பர் 12ம் தேதி நடந்த நீட் தேர்வில், மகராஷ்டிராவில் உள்ள புனே பயிற்சி மையம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் தேர்வு மையங்களில் முறைகேடு நடந்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆள்மாறாட்டம், எலக்ட்ரானிக் பொருட்களை வைத்து தேர்வு எழுதுதல் உள்பட பல முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தேர்வு எழுதிய சில மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதற்கு பதில் மீண்டும் நீட் தேர்வு நடத்த வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணை முடியும் வரை நீட் தேர்வு முடிவினை வெளியிடக்கூடாது எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.
அதுமட்டுமல்லாது, நீட் தேர்வினை ரத்து, செய்து மறுதேர்வு நடத்துவது குறித்து, தேசிய தேர்வு முகமை சில வாரங்களுக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய கோர வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் தேர்வு தொடர்பாக உண்மை கண்டறியும் அறிக்கைகளை அந்தந்த மாநில போலீசார் மற்றும் சிபிஐ தாக்கல் செய்யவும் உத்தரவிட கோரப்பட்டுள்ளது. இந்த மனுவானது விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.