வங்கதேச பிரதமரின் இந்திய பயணம் ஏன்?

   வங்கதேச பிரதமரின் இந்திய பயணம் ஏன்?

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இன்று  நான்கு நாள்பயணமாக இந்தியா வந்துள்ளார்.

முதன்மையான துறைகளில் ஒத்துழைப்பு

ஷேக் ஹசீனா பாதுகாப்பு, வணிகம் மற்றும் ஆற்று நீர் பகிர்வு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்துகிறார். வங்கதேச பிரதமர் செப்டம்பர் 5 முதல்  8 வரையிலான தனது இந்திய  பயணத்தின் போது புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தங்கர் ஆகியோரையும் சந்திப்பார் என கூறப்படுகிறது.

வங்கதேச தூதுக் குழு

ஹசீனாவின் வங்கதேச தூதுக்குழுவில் வெளியுறவு அமைச்சர் ஏ.கே.அப்துல் மொமன், வணிக அமைச்சர் திப்பு முன்ஷி, தொடர்வண்டித் துறை அமைச்சர் எம்.டி.நூருல் இஸ்லாம் சுஜான், விடுதலைப் போர் அமைச்சர் ஏகேஎம் மொசம்மல் ஹக் மற்றும் பிரதமரின் பொருளாதார ஆலோசகர் மஷியூர் ஏ.கே.எம்.ரஹ்மான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இரு நாடுகளும் பாதுகாப்பு, வர்த்தகம், நதிநீர்ப் பகிர்வு மற்றும் வேறு சில துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அறிவிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியுடன் சந்திப்பு

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் இந்திய ஒன்றியத்தின் பிரதமர் நரேந்திர மோடி இடையேயான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து குஷியாரா ஆற்று நீரின் இடைக்காலப் பகிர்வு உட்பட பல ஒப்பந்தங்களில் வங்கதேசமும் இந்தியாவும் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் 5 அன்று தொடங்கும் பிரதமர் ஷேக் ஹசீனாவின் இந்திய பயணத்தின் போது, ​​நீர் மேலாண்மை, ரயில்வே, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் ஏழு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுவதாக வங்க தேசத்தின் வெளியுறவு அமைச்சர் ஏ.கே. அப்துல் மொமன் தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தங்கள் குறித்த கலந்துரையாடல்

எரிவாயு, எண்ணெய் விநியோகம் தொடர்பாகவும் இரு தரப்பும் கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இருப்பினும், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மீதான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அவற்றின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

பாதுகாப்பு ஒத்துழைப்பு, முதலீடு, மேம்பட்ட வர்த்தக உறவுகள், மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை ஒத்துழைப்பு, பொதுவான நதிகளின் நீர் பகிர்வு, நீர்வள மேலாண்மை, எல்லை மேலாண்மை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் மனித கடத்தல் ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவது ஆகியவை இந்த பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்படும் என்று PTI அறிக்கை மேற்கோளிட்டுள்ளது. டெய்லி ஸ்டார் செய்தித்தாளில் இருந்து.

ஆற்று நீர் ஒப்பந்தம்

குஷியாரா நதி நீரை இடைக்காலமாக பகிர்ந்து கொள்வது தொடர்பான ஒப்பந்தத்தின் உரையை இரு நாடுகளும் இறுதி செய்தன. ஆகஸ்ட் 25 அன்று டெல்லியில் நடந்த இந்தியா-வங்காளதேச கூட்டு நதிகள் ஆணையத்தின் 38வது அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் உரை இறுதி செய்யப்பட்டது.

இந்தியாவும் வங்கதேசமும் தமக்கிடையே 54 நதிகளைப் பகிர்ந்து கொள்கின்றன. அவற்றில் ஏழு நதி நீர் பகிர்வு ஒப்பந்தங்களை உருவாக்குவதற்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவின் வணிக கூட்டு

தெற்காசியாவில் வங்கதேசம் இந்தியாவின் மிகப்பெரிய வணிக கூட்டாளியாக உள்ளது. இருதரப்பு வணிகம் கடந்த ஐந்து ஆண்டுகளில் 9 பில்லியன் டாலரிலிருந்து 18 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. 2020-21 ஆம் ஆண்டில் 9.69 பில்லியன் டாலரிலிருந்து 2021-22 ஆம் ஆண்டில் 16.15 பில்லியன் டாலராக ஏற்றுமதி 66 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்து, இந்தியாவின் நான்காவது பெரிய ஏற்றுமதி இடமாக வங்காளதேசம் மாறியுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஹசீனா இந்தியா வருகிறார். அவர் இறுதியாக அக்டோபர் 2019 இல் புது தில்லிக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.