பங்களாதேஷ் பிரதமர் டெல்லி வருகிறார்

பங்களாதேஷ் பிரதமர் டெல்லி வருகிறார்

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா நான்கு நாள் பயணமாக செப்டம்பர் 5 ஆம் தேதி இந்தியாவுக்கு வரவுள்ளார். உலகளாவிய ஊரடங்கு தளர்வுக்குப் பின் அவரது முதல் பயணம் இதுவாகும். பயணத்திற்கான ஏற்பாடு மற்றும் நெறிமுறைகள் குறித்து விவாதிக்க பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் குழு ஒன்று முன்கூட்டியே டெல்லி வந்திருப்பதாக அரசு தரப்பு தகவல்கள் கூறுகின்றன.

ஹசீனா செப்டம்பர் 5 முதல் 8 வரை இந்தியாவில் இருப்பார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற இந்தியத் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் எனக் கூறப்படுகிறது. அவர் செப்டம்பர் 8 ஆம் நாள் பங்களாதேஷ் திரும்புவார் என கூறப்படுகிறது.

இரு தரப்பு பேச்சுவார்த்தைக்காக செப்டம்பர் 6 ஆம் நாள் இரு நாட்டுத் தலைவர்கள் சந்திக்கும் போது வணிகம், பாதுகாப்பு உறவுகள் இரு தரப்புக்கும் இடையிலான உரையாடலில் அதிகம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, எல்லை மேலாண்மை, ஆற்று நீர் பகிர்வு மற்றும் வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு ஆகியவை கலந்துரையாடலின் ஒரு பகுதியாக இருக்கும் என்று அரச வட்டாரங்கள் தெரிவித்தன.

ஹசீனா 2019 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்திருந்தார். ​​பங்களாதேஷ் விடுதலைப் போரின் 50 ஆண்டுகளை நினைவுகூரும் மற்றும் இரு நாடுகளுக்கு இடையே இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதற்காகவும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மோடி பங்களாதேஷ் சென்றார். சிறந்த இருதரப்பு உறவுகள் இறையாண்மை, சமத்துவம், நம்பிக்கை மற்றும் புரிதல் ஆகியவற்றின் அடிப்படையில் அனைத்தையும் உள்ளடக்கிய கூட்டுறவை பிரதிபலிப்பதாக கூறப்படுகிறது.