ஜனநாயகத்தை  முடக்கும் பாஜக – நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு!

ஜனநாயகத்தை  முடக்கும் பாஜக – நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு!

பாஜக ஆட்சியில் மக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல், சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதும், ஆட்சியை கவிழ்ப்பதும் என அனைத்து விதத்திலும் ஜனநாயகத்தை முடக்கும் செயலில் பாஜக ஈடுபட்டு வருவதாக புதுச்சேரி மக்களவைத் தொகுதி வைத்தியலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.

மருந்துகள் இல்லாத நிலை

புதுச்சேரி மக்களவைத் தொகுதி எம்.பி வைத்தியலிங்கம் இன்று தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், புதுச்சேரியில் இயங்கி வரும் ஒன்றிய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில், அத்தியாவசிய மருந்துகள் இல்லாத நிலை உள்ளது.

இதனால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஜிப்மரில் அத்தியாவசிய மருந்துகள் கிடைக்க ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். இதேபோல் புதுச்சேரியில் புற்றுநோயால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், புதுச்சேரியில் புற்றுநோய் சிகிச்சை மையத்தை உடனடியாக அமைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

ஜனநாயகத்தை முடக்கும்

சபாநாயகர் என்பவர் நடுநிலையானவர். ஆனால் புதுச்சேரியில் உள்ள சபாநாயகர் நடுநிலை தவறி அரசியல்வாதிபோல் செயல்படுவதாகவும், இது பாஜகவின் மிக மோசமான முன் உதாரணம் என சாடினார். பாஜக அரசு அனைத்து விதத்திலும் ஜனநாயகத்தை முடக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டினார். மேலும் மக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய முடியால், சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதும், ஆட்சியை கவிழ்ப்பதுமாக பாஜகவின் செயல் உள்ளதாக தெரிவித்தார்.