தூய்மை இந்தியா அழைப்பு;  குப்பைகளை அகற்றிய மத்திய அமைச்சர்கள்!

தூய்மை இந்தியா அழைப்பின் ஒரு பகுதியாக டெல்லியில் பிரதமர் மோடி குப்பைகளை அகற்றிய நிலையில், நாடு முழுவதும் மத்திய அமைச்சர்களும் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் 7 லட்சம் இடங்களில் தூய்மைப் பணிகளில் ஈடுபடுமாறு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். தொடர்ந்து டெல்லியில் பளுதூக்கும் வீரரான அன்கித் பய்யன்புரியாவுடன் பிரதமர் மோடி குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தார்.

குஜராத்தின் அகமதாபாத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாலையில் குப்பைகளை அகற்றிய நிலையில், ஹரியானாவின் குருகிராமில் மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் தூய்மைப்பணி மேற்கொண்டார். டெல்லியில் ஜிதேந்திர சிங், ராஜீவ் ராஜசேகர், ராஜஸ்தானில் பியூஷ்கோயல் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் குப்பைகளை அகற்றினர்.

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சீதாபூரில் தூய்மைப் பணி மேற்கொண்டதோடு, மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று குப்பைகளை அகற்றினார்.

இதேபோன்று மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, பாஜக தேசியத்தலைவர் நட்டா உள்ளிட்டோரும் சாலைகளில் இறங்கி தூய்மைப்பணி மேற்கொண்டனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com