சுங்கச் சாவடியில் சுங்கச் சாவடியில் அடிதடி
ஆந்திராவின் திருப்பதி அருகே சுங்கச் சாவடியில் ஊழியர்கள் மற்றும் தமிழக சட்டக் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இரும்பு, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் சுங்கச்சாவடி ஊழியர்கள் மாணவர்களை சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு திரும்பிய மாணவர்கள்
திருப்பதியில் உள்ள சட்டக்கல்லூரிகளில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் முந்நூறூக்கும் மேற்பட்டோர் சட்டப் படிப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற தேர்வில் கலந்து கொண்ட மாணவர்கள் மீண்டும் தமிழ்நாடு திரும்பியுள்ளனர். அப்போது புத்தூர் வடமாலபேட்டை சுங்கச் சாவடியில் பாஸ்ட்ராக் வேலை செயல்படாததால் சுங்கச் சாவடி ஊழியர்கள் 160 ரூபாய் கட்டணத்தை ரொக்கமாக செலுத்துமாறு வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக மாணவர்களை சரமாரியாக தாக்கிய ஊழியர்கள்
சுங்க கட்டணமான 40 ரூபாய்க்கு பதிலாக 160 ரூபாய் செலுத்த வலியுறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. காவல் துறையினரின் முன்னிலையில் நடைபெற்ற இந்த வாக்குவாதம் முற்றியதில் சுங்கச் சாவடி ஊழியர்கள் இரும்பு, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தமிழக மாணவர்களை சரமாரியாக தாக்கினர்.
தமிழக மாணவர்கள் குற்றச்சாட்டு
மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த தமிழ்நாடு பதிவெண் கொண்ட வாகனங்களும் தாக்குதலுக்கு உள்ளாகின. இந்த தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, சம்பவ இடத்தில் இருந்த ஆந்திர மாநில காவல் துறையினர் தாக்குதல் நடத்தியவர்களுக்கே சாதகமாக நடந்து கொண்டதாக தமிழக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.