நடந்து முடிந்தது..! யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வு..!

நடந்து முடிந்தது..!   யு.பி.எஸ்.சி.  முதல்நிலைத் தேர்வு..!

இந்திய குடிமைப்பணி 2023-ம் ஆண்டு முதல்நிலைத் தேர்வுகள் நாடு முழுவதும் இன்று நடந்தது:  

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமைப் பணித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட 21  பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டது.

மேலும், இந்தியா முழுவதும் 7 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தமிழகத்தில் சுமார் 50,000 பேர் வரை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா முழுவதும் 73 நகரங்களில் நடைபெறுகிறது தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய 5 இடங்களில் நடைபெற்றது. மொத்தமாக சிவில் சர்வீஸ் பணியில்  1,105 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடைபெற்றது . 

இந்தத் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இத்தேர்வில் கலந்துகொள்வதற்கு ஏதாவது ஓர் இளங்கலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும். இந்தியாவில் நடைபெறும் மிகக்கடினமான தேர்வுகளில் இது  முதன்மையானது. 

இந்நிலையில், இன்று இந்த தேர்வின் இரண்டு தாள்களும் காலை, மதியம் என இரு வேளைகளில் நடைபெற்றது. பொது படிப்புகள் எனப்படும் ஜிஎஸ் (GS I) தாளுக்கான தேர்வு காலையிலும் சிசேட் (CSAT) தேர்வு மதியமும் நடைபெற்றது. 

அண்மையில் 2022-ம் ஆண்டு தேர்வில் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் வெளியானது. அதில் 933 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். முதல் 4 இடங்களை பெண்கள் கைப்பற்றியிருந்தார்கள்.

கடந்த ஆண்டுக்கான இந்தியக் குடிமைப் பணி முதல்நிலைத் தேர்வு ஜூன் 5ம் தேதி நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு செப்டம்பர் 16 – 25ம் தேதி வரை முதன்மைத் தேர்வுகள் நடைபெற்றன. இதன் முடிவுகள் டிசம்பர் 6ம் தேதி வெளியானது.

முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இந்தாண்டு மார்ச் 13ம் தேதி முதல் மே 18ம் தேதி வரை தலைநகர் டெல்லியில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 23 அன்று அறிவிக்கப்பட்டன. இதில் 933 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், தமிழ்நாட்டில் இருந்து 42 பேர் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  .

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com