இந்தியா இலங்கை மக்களுடன் நிற்கும்.....இந்திய வெளியுறவுதுறை அமைச்சகம் அறிவிப்பு....

இந்தியா இலங்கை மக்களுடன்  நிற்கும்.....இந்திய வெளியுறவுதுறை அமைச்சகம் அறிவிப்பு....

இந்தியா இலங்கை மக்களுக்கு துணை நிற்கும் என இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் அண்மைய முன்னேற்றங்களைத் தொடர்ந்து பின்பற்றி வருவதாக நரேந்திர மோடி அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

இலங்கை மற்றும் அதன் மக்கள் எதிர்கொள்ளும் பல சவால்களை  அறிந்துள்ளதாகவும் மேலும் இந்த கடினமான காலகட்டத்தை கடக்க முயலும் இலங்கை மக்களுடன் நிற்பதாகவும் வெளியுறவுதுறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் நெருங்கிய அண்டை நாடாக இந்தியா இருப்பதால் இலங்கையின் தீவிரமான பொருளாதார நிலைமையை சீர்செய்வதற்காக 3.8 பில்லியன் டாலர் உதவியை முன்னரே வழங்கியதாக வெளியுறவுதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் அண்மைய முன்னேற்றங்களை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அவர்களின் விருப்பமான ஜனநாயக வழிமுறைகள் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் நாட்டின் முன்னேற்றத்திற்கான  கனவை நனவாக்க  இலங்கை மக்களுடன் இந்தியா நிற்கும் எனவும்என்று அவர்  கூறியுள்ளார்.

இலங்கை கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் நேரத்தில்வெளியுறவுதுறையின் இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்களால் போராட்டங்கள் தீவிரமடைந்ததை அடுத்து, குழப்பமான சூழலில் அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷெ ஜூலை 13 அன்று பதவி விலகுவதாகக் கூறியுள்ளதாக தெரிகிறது. பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலகப் போவதாக தெரிவித்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. 

இலங்கையின் நிதியமைச்சகம் மற்றும் மத்திய வங்கியுடன் தொழில்நுட்ப கலந்துரையாடல்களை தொடர திட்டமிட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளது. அமெரிக்கா இலங்கையின் வளர்ச்சிகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், மக்களின் அதிருப்தியை நிவர்த்தி செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி வருவதாகவும் அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலர் ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார்.