இந்திய ஒன்றிய கீதத்தை கட்டாயமாக்கிய கர்நாடக பாஜக அரசாங்கம்!

இந்திய ஒன்றிய கீதத்தை கட்டாயமாக்கிய கர்நாடக பாஜக அரசாங்கம்!

கர்நாடகாவில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் பி.யூ.சி கல்லூரிகளில் தினமும் காலையில் இறை வணக்கத்தின்  போது இந்திய ஒன்றிய கீதம் பாடப்பட வேண்டும் என்று கர்நாடக அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 17 தேதியிட்ட உத்தரவு அனைத்து அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் பி.யூ.சி கல்லூரிகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசு உத்தரவு அமலில் இருந்தும், பெங்களூருவில் உள்ள சில தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் காலை இறை வணக்கத்தின் போது ஒன்றிய கீதம் பாடுவதை நடைமுறைப்படுத்துவது இல்லை, இது குறித்து அரசுக்கு புகார்கள் வந்துள்ளன.

புகார்களைத் தொடர்ந்து, பொதுக்கல்வித் துறையின் துணை இயக்குநர்கள், பெங்களூரு வடக்கு மற்றும் தெற்கு பிரிவுகள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று, காலை இறை வணக்கத்தில் இந்திய ஒன்றிய கீதம் பாடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினர்.

உத்தரவில் கர்நாடகா கல்விச் சட்டத்தின் 133(2) பிரிவை மேற்கோள் காட்டியுள்ளது, இது அரசாங்கத்திற்கு வழிகாட்டுதல்களை வழங்குவதற்கான அதிகாரத்தை வழங்குகிறது. பெருந்திரள் இறைவணக்கத்திற்கு இடமில்லாத பட்சத்தில் வகுப்பறைகளில் இந்திய ஒன்றிய கீதம் பாடப்பட வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.