"மொழி மற்றும் சட்டத்தின் எளிமை ஆகியவை நீதி வழங்கும் முறையின் மறுபகுதி" பிரதமர் மோடி!

மொழி மற்றும் சட்டத்தின் எளிமை ஆகியவை நீதி வழங்கும் முறையின் மறுபகுதி என்றும் அதைப் பற்றி நாம் இன்றளவும் அதிகம் பேசவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

டெல்லியில் உள்ள அறிவியல் மையத்தில் இந்திய வழக்கறிஞர்கள் கழகத்தின் சார்பில் நடைபெறும் சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டை பிரதமர் மேடி தொடங்கி வைத்தார். அப்போது, பிரதமர் மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் ஆகியோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.

விழாவில் பேசிய பிரதமர் மோடி, நாடு பல்வேறு வரலாற்று அடிகளை எடுத்து வைக்கும் காலத்தில் இந்த மாநாடு நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். அண்மையில் நிறைவேற்றப்பட்ட பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதா, இந்தியாவில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு ஒரு புதிய திசை மற்றும் சக்தியை வழங்கும் என நம்பிக்கை தெரிவித்தார். 

சுதந்திர போராட்டத்தின் போது பல வழக்கறிஞர்கள் தங்களது தொழிலை விட்டு விடுதலை இயக்கத்தில் இணைந்து போராடியதை நினைவு கூர்ந்த பிரதமர், பாரத நாட்டின் மீதான உலக நாடுகளின் நம்பிக்கைக்கு பாரதத்தின் சுதந்திரமான நீதித்துறை முக்கிய பங்காற்றி வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.

எந்த ஒரு நாட்டையும் கட்டியெழுப்புவதில் சட்டத்தின் பங்கு முக்கியம் என்று  கூறிய பிரதமர், நீதித் துறை மற்றும் வழக்கறிஞர்கள் இந்தியாவின் சட்டம் ஒழுங்கின் பாதுகாவலர்களாக இருந்து வருவதாக கூறினார். 

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com