மணிப்பூர் கலவரம்: கலவரத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பிரேன்சிங் பதவி விலகுவதாக தகவல்!

மணிப்பூர் கலவரம்: கலவரத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பிரேன்சிங் பதவி விலகுவதாக தகவல்!

மணிப்பூரில், பாதிக்கபட்டோரை நேரில் சந்தித்து ராகுல்காந்தி ஆறுதல் தெரிவித்துள்ள நிலையில், கலவரத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பிரேன்சிங் பதவி விலகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பழங்குடி அந்தஸ்து கேட்ட மெய்தி  இனத்தவர்களுக்கும், இதனை எதிர்த்த குகி பழங்குடியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்ததில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 3 மாதங்களாக மாநிலத்தில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இருநாள் பயணமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மணிப்பூர் சென்றடைந்தார். எனினும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அவருக்கு  அனுமதி மறுக்கப்பட்டதால் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள  மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இன்று இரண்டாவது நாளில் மொய்ராங் நிவாரண முகாமுக்கு ராகுல்காந்தி சென்றுள்ளார். அப்போது அவருக்கு ஆதரவாக ஏராளமான பெண்கள் பேரணி சென்று ராகுலை வரவேற்றனர். தொடர்ந்து குழந்தைகள், பெண்கள் கண்ணீருடன் ராகுல்காந்தியிடம் நிலைமை தொடர்பாக எடுத்துரைத்துள்ளனர்.

இதையடுத்து, ஒத்த கருத்து கொண்ட 10 முக்கியக் கட்சிகளின் தலைவர்கள், யுனைடட் நாகா கவுன்சில் உறுப்பினர்கள், சிவில் சமூக அமைப்பினரிடம் ஆலோசனை நடத்த ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளார் எனவும் மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஆளுநர் அனுசுயா உய்கேவை ராகுல்காந்தி சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மணிப்பூர் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வராததற்கு பொறுப்பேற்று, முதலமைச்சர் பிரேன்சிங் பதவி விலகப் போவதாகவும், விரைவில் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க: மெட்ரோ ரயில் நிலையங்களில் உலக கோப்பை போட்டி ஒளிபரப்பு!