கேரளாவில் குரங்கு அம்மை காய்ச்சல்?

கேரளாவில் குரங்கு அம்மை காய்ச்சல்?

குரங்கு அம்மை காய்ச்சலின் அறிகுறிகள் இருப்பதாக சந்தேகத்தின் பேரில் வெளிநாட்டுப் பயணி ஒருவருக்கு கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கேரள இளைஞருக்கு குரங்கு அம்மை?


தனிமைப்படுத்தப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த அந்த நபர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு திரும்பினார். ஐக்கிய அரபு அமீரகத்தில் அவரோடு இருந்த நபருக்கு குரங்கு காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கேரளா வந்த அந்த நபருக்கும் குரங்கு அம்மை காய்ச்சல் அறிகுறி இருந்ததாக கூறப்படுகிறது. குரங்கு அம்மை காய்ச்சல் நோய் தொற்றை உறுதி செய்யும் விதமாக அந்த நபரின் ரத்த மாதிரி,  புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கேரள சுகாதாத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 


குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் அந்த நபர் யார் என்பதோ, அவர் தற்போது, எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு, அளிக்கப்படும் சிகிச்சை உள்ளிட்ட எந்த விவரங்களையும் கேரள அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.   


வெளிநாடுகளை அச்சுறுத்தும் குரங்கு அம்மை:


சர்வதேச பயணத்தின் மூலம் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் குரங்கு அம்மை வேகமாகப் பரவி வருவதாகக் கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக, மே கடைசி வாரத்தில் இருந்து, குரங்கு அம்மை நோய்க்கு எதிராக முன்னெச்சரிக்கையுடன் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை கேரளா எடுத்து வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
அனைத்து மாவட்டங்களிலும் நோய் கண்காணிப்பை அதிகரிக்கவும், எச்சரிக்கையாக இருக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கேரளாவில் உள்ள நான்கு சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் அதிக சுற்றுலாப் பயணிகளின் வருகை தரும் பொது இடங்களில் சுகாதாரக் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  


குரங்கு அம்மை அறிகுறிகள்: 


காய்ச்சல் மற்றும் தலைவலி போன்ற காய்ச்சலின் பொதுவான அறிகுறிகளுடன் குரங்கு அம்மை தோன்றும் எனவும் ஆனால் இந்த நோய்  காய்ச்சலுக்கு சில நாட்களுக்குப் பிறகு உடலில் தோன்றும் புண்களால் வேறுபடுகிறது.  குரங்கு அம்மை நோயின் அறிகுறிகளின் வெளிப்படவே ஐந்து முதல் 21 நாட்கள் வரை ஆகும் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.  
நெருங்கிய தொடர்பு மூலமாகவும் நோயாளி பயன்படுத்திய உடைகள் அல்லது படுக்கைகளைத் தொடுவதன் மூலமும் இந்த குரங்கு அம்மை நோய் பரவுகிறது. அத்துடன், நோயாளிகள் பயன்படுத்திய உணவு, உடை,  பொருட்களை, பகிர்வதன் மூலமும் குரங்கு அம்மை பரவ அதிக வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


சுகாதார அவசரநிலை:


குரங்கு அம்மையை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவிக்க வேண்டுமா என்பதை முடிவு செய்ய உலக சுகாதார அமைப்பு அடுத்த வாரம் அவசரக் கூட்டத்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
சுமார் 63 நாடுகளில் 9,000 முதல் 10,000 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தற்போது குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


குரங்கு அம்மை நோய் குடும்பம்: 


குரங்கு அம்மை வைரஸ், அம்மை வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது.  1958 இல் குரங்குகளில் இது முதன்முதலில் கண்டறியப்பட்டது. தற்போதைய 19 நாடுகளில் 220 க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் உள்ளதாகவும் தெரிகிறது.
தற்போதைய ஆய்வின் படி, குரங்கு அம்மை நோய் வைரஸில் இரண்டு வேறுபட்ட வகைகள் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஒன்று காங்கோ பேசின் / மத்திய ஆப்பிரிக்க வகை மற்றொன்று மேற்கு ஆப்பிரிக்க வகை.


பெரியம்மை தடுப்பூசி  குரங்கு அம்மை வைரஸுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது என தெரிகிறது. 1980ல் பெரியம்மை ஒழிக்கப்பட்டதைத் தொடர்ந்து தடுப்பூசி நிறுத்தப்பட்டிருந்தாலும், தடுப்பூசிகளின் அவசர கையிருப்பு பல நாடுகளால் பராமரிக்கப்படுகிறது