நாட்டின் ஜனநாயகம் தங்கள் குடும்பத்தினரின் ரத்தத்தால் வளர்க்கப்பட்டதாக, டெல்லி காங்கிரஸ் சத்தியாகிரகப் போராட்டத்தில் பிரியங்கா காந்தி ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.
எல்லா சமூகத்தினரின் பெயரும் மோடி என்றே முடிவதாக, 2019ம் ஆண்டு கர்நாடகாவில் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசினார். இதனால் மோடி சமூகத்தினரை ராகுல்காந்தி அவமதித்ததாக, பாஜக எம்எல்ஏ தொடர்ந்த வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவரது எம்பி பதவி, நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது.
இதற்கு நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நாடு முழுவதும் ஒருநாள் சத்தியாகிரகப் போராட்டத்தை காங்கிரஸ் அறிவித்தது. தொடர்ந்து டெல்லி ராஜ்கட்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் 144 தடை உத்தரவையும் மீறி போராட்டம் நடைபெற்றது. இதில் பிரியங்கா காந்தி, ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜூன கார்கே, நாடு முழுவதும் இனி சத்தியாகிரகங்கள் தொடரும் என குறிப்பிட்டார். ராகுல்காந்தி தேசத்திற்காகவே எப்போதும் போராடியதாகவும், கர்நாடகாவில் வழக்குப்பதிவு செய்ய தைரியம் இல்லாததாலேயே, குஜராத்திற்கு வழக்கை பாஜக மாற்றியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய பிரியங்கா காந்தி, தனது சகோதரர் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை கட்டிப்பிடித்து எந்த வெறுப்பும் உங்கள் மீது இல்லை என குறிப்பிட்டதாகக் கூறினார். நாடாளுமன்றத்தில் தனது தந்தை அவமதிக்கப்பட்டதாகவும், ஆளுங்கட்சி அமைச்சர்கள் தனது தாயை அவமானப்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அவர்கள் ஒருநாளும் நாடாளுமன்றத்தில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்படுவதில்லை எனவும் நாட்டிற்காக போராடியதற்காக தனது குடும்பத்தினர் வெட்கப்பட வேண்டுமா என கேள்வியெழுப்பிய அவர், தேசத்தின் ஜனநாயகம் தங்கள் குடும்பத்தினரின் ரத்தத்தால் வளர்க்கப்பட்டதாகக் கூறினார்.