காரைக்காலிலும் கைது செய்யப்பட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர்!

காரைக்காலிலும் கைது செய்யப்பட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர்!

காரைக்காலில் நள்ளிரவில் எஸ்டிபி ஐ கட்சி புதுச்சேரி மாநில துணைத் தலைவர் முகமதுபிலால் உள்ளிட்ட 3 பேரை என். ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்து அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

புலனாய்வுத் துறை சோதனை

பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள பயிற்சி முகாம்களுக்கு ஏற்பாடு செய்ததாக குற்றம்சாட்டி ஆந்திரா, தெலுங்கானாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு சொந்தமான 23 இடங்களில் தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட நிர்வாகிகள்

அதன்படி  காரைக்கால் மாவட்டம் காரைக்கால் மற்றும் திருப்பட்டினம் பகுதிகளில் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள்  சோதனை மேற்கொண்டனர்.

இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா செயற்குழு உறுப்பினர் பதுருதீன், காரைக்கால் காமராஜர் வீதியில் உள்ள குத்தூஸ், எஸ்.டி.பி. ஐ. கட்சி புதுச்சேரி மாநில துணைத் தலைவர் முகமதுபிலால் ஆகியோரை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

கண்டன போராட்டம்

இந்த கைது நடவடிக்கை முற்றிலும் மத்திய அரசின்  பழிவாங்கும் நடவடிக்கை  என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட இஸ்லாமிய கூட்டமைப்பை சார்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மூன்று பேரில் உறவினர்கள் காரைக்கால் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளனர். காமராஜர் சாலையில் உள்ள குத்தூஸ் என்பவரின் உறவினர் வீட்டுக்குச் சென்ற என். ஐ.ஏ. போலீசார் அங்கு மருத்துவச் செலவுக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து 75 ஆயிரம் பணத்தை எடுத்துச் சென்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.