ஏழை எளிய மக்களின் நன்மைக்காகவே பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளதாக ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2008-09 ஆண்டுகளில் உலக பொருளாதாரத்தில் மந்த நிலை நீடித்தது. இதன் காரணமாக அப்போது கச்சா எண்ணெய் விலை 100 டாலரை எட்டியது. ஆனாலும் அப்போது பெரிய அளவில் பெட்ரோல் விலையில் ஏற்றம் இல்லை. அதன் பின் 2013ம் ஆண்டுக்கு பின் பொருளாதார நிலை சீரானதால் கச்சா எண்ணெய் விலை குறையத்தொடங்கியது.
அதன்பின் பாஜக ஆட்சிக்கு வந்ததும் அமெரிக்கா, கச்சா எண்ணெயை மீண்டும் விற்க தொடங்கியதால் கச்சா எண்ணெய் விலை அடிமாட்டு விலைக்கு சரிந்தது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெட்ரோல்,டீசல் விலை அதிகரித்தது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறையும்போது இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலை குறையாது, ஆனால் கச்சா எண்ணெய் விலை உயரும் போது பெட்ரோல்,டீசல் விலை அதிகரிக்கும்.
இப்படி தொடர்ந்து பெட்ரோல்,டீசல் விலை உயர்ந்து வந்த நிலையில் தற்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ஐ தொட்டுள்ளது. இந்த பெட்ரோல் விலை உயர்வுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் தொடர்ந்து வருகின்றன. மேலும் இந்த விலை உயர்வால் அத்தியாவசிய பொருள்களின் விலைகள் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் "பெட்ரால், டீசல் விலை உயர்வு மக்களுக்கு சிக்கலாக இருப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அது ஒன்றிய, மாநில அரசாக இருந்தாலும், கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் ஒரு வருடத்தில் ரூ .35,000 கோடிக்கு மேல் தடுப்பூசிகளுக்கு செலவிடப்படுகிறது. மேலும் நலத்திட்டங்களுக்கு செலவிட பணத்தை சேமிக்கிறோம்.
ஏழைகளுக்கு எட்டு மாத அரசி வழங்குவதற்காக பிரதம மந்திரியின் கரீப் கல்யாண் யோஜனாவுக்கு ரூபாய் 1 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. அதேபோல் பிரதமரின் கிசானின் கீழ் சில ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற நெருக்கடியாக காலங்களில், நலத்திட்டங்களுக்காக செலவிட பணத்தை மிச்சப்படுத்துகிறோம். உள்ளூர் வரி மற்றும் அவை மீது விதிக்கப்படும் சரக்கு கட்டணங்கள் ஆகியவற்றைப் பொறுத்து எரிபொருள் விலைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன.இதன் காரணமாக, தற்போது ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் லடாக் ஆகிய மாநிலங்களில் பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுகிறது" என தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.