தாடியை வளர்த்தது போதும், நாட்டை வளருங்கள்.! மோடியின் தாடியை ஷேவ் செய்ய 100 ரூபாய் அனுப்பிய டீ கடைக்காரர்.! 

தாடியை வளர்த்தது போதும், நாட்டை வளருங்கள்.! மோடியின் தாடியை ஷேவ் செய்ய 100 ரூபாய் அனுப்பிய டீ கடைக்காரர்.! 

மோடியின் தாடியை ஷேவ் செய்ய டீ கடைக்காரர் ஒருவர் 100 ரூபாயை அனுப்பியுள்ள சம்பவம் இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

கடந்த ஆண்டு கொரோனா இந்தியாவில் நுழைந்த போது முன்னறிவிப்பு ஏதும் இன்றி பிரதமர் மோடி ஊரடங்கை அறிவித்தார். இந்த திடீர் ஊரடங்கால் புலம்பெறும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். மேலும் அனைத்து தொழில்களும் முடங்கியதால் வேலைவாய்ப்பின்றி பலர் சாப்பிட உணவின்றி வாடினர். 

தற்போது கொரோனாவின் இரண்டாம் அலையின் பாதிப்பும் மக்களை கடுமையாக பாதிக்கிறது. இந்த பாதிப்பை போக்க பிரதமர் மோடி ஏதும் செய்யவில்லை என்றும், அவர் ராஜினாமா செய்யவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. இந்நிலையில்  மஹாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த ஒருவர்  மோடியின் தாடியை ஷேவ் செய்ய 100 ரூபாயை அனுப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலத்தின் பாரமதியைச் சேர்ந்த டீ கடைக்காரரான அனில் மோர் கூறுகையில் "பிரதமர் மோடி தனது தாடியை நன்கு வளர்த்துக்கொண்டார். அவர் எதையாவது வளர்க்க வேண்டும் என்றால், அது இந்த நாட்டு மக்களுக்கான வேலை வாய்ப்பாக இருக்க வேண்டும்.  மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நாட்டில் தற்போதுள்ள மருத்துவ வசதிகளை அதிகரிக்க முயற்சிகள் எடுக்க வேண்டும். 

கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையால் அமல்படுத்தப்பட்ட இரண்டு பொதுமுடக்கங்களால் மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட துயரங்களிலிருந்து விடுபடுவதை பிரதமர் உறுதிப்படுத்த வேண்டும். பிரதமரின் பதவி நாட்டின் மிக உயர்ந்த பதவியாகும். நமது பிரதமர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவர் தனது தாடியை ஷேவ் செய்வதற்காக எனது சேமிப்பில் இருந்து 100 ரூபாயை அனுப்புகிறேன். அவர் பெரிய பதவியில் உள்ள தலைவர், நான் அவரை காயப்படுத்த விரும்பவில்லை. ஆனால் கொரோனா எனும் தொற்றுநோயால் ஏழை மக்களின் பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில், இது அவரது கவனத்தை ஈர்க்கும் ஒரு வழியாகும்" எனக் கூறியுள்ளார்.