எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்...!

Published on
Updated on
1 min read

இந்திய வேளாண் விஞ்ஞானியும், பசுமைப் புரட்சியின் தந்தையுமான எம்.எஸ். சுவாமிநாதன் மறைவிற்கு, பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இந்தியாவின் சிறந்த வேளாண் விஞ்ஞானியும், பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவருமான எம்.எஸ்.சுவாமிநாதன், சென்னையில் காலமானார். 98 வயதான இவர், உடல்நலக் குறைவு காரணமாக, உயிரிழந்தார். இவரது உடல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

அவரது மறைவிற்கு, பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், ஆந்திர மாநில முதலமைச்சர் ஜகன்மோகன் ரெட்டி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஜி.கே. வாசன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 1925-ம் ஆண்டு பிறந்த எம்.எஸ். சுவாமிநாதன், கோவை வேளாண் கல்லூரியில் இளநிலைப் பட்டமும், டெல்லியில் மரபணு பயிர்கள் குறித்த முதுநிலைப் பட்டமும் பெற்றார். 1960களில் ஏற்பட்ட உணவு பஞ்சத்தின் போது, ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ரக கோதுமையை அறிமுகம் செய்து அதிக உற்பத்தியையும், லாபத்தையும் ஈட்டினார். இதனை கோதுமை புரட்சி என்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி பாராட்டினார். உணவு பொருட்களை இறக்குமதி செய்த நிலையை மாற்றி வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிலையை உருவாக்கினார். பட்டினி இல்லாத இந்தியாவே தனது கனவு என்று கூறிய சுவாமிநாதன் தனது 98 வயதில் காலமானார். 

இவரது உடல் நாளை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும், இறுதிச் சடங்கு நாளை மறுநாள் நடைபெறும் என்றும் அவரது மகள் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.  

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com