"டேராடூன் -டெல்லி மெட்ரோ ரயில்" தொடங்கி வைத்த பிரதமர்!

"டேராடூன் -டெல்லி மெட்ரோ ரயில்" தொடங்கி வைத்த பிரதமர்!

டேராடூனில் இருந்து டெல்லி செல்லும் நாட்டின் 17ஆவது வந்தே பாரத் ரயில் சேவையை காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 

உத்தரகண்ட் மாநிலத்திற்கு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது. அதன்படி இந்த வந்தே பாரத் ரயில் டேராடூன் மற்றும் டெல்லி இடையே இயக்கப்படுகிறது. இது டெல்லிக்கு இயக்கப்படும் ஐந்தாவது வந்தே பாரத் ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரயில் 314 கிலோ மீட்டர் தூரத்தை நான்கு மணி நேரம் 45 நிமிடங்களில் கடக்கும் என்றும், புதன்கிழமை தவிர வாரத்தின் ஆறு நாட்கள் இயக்கப்படும் என்றும், 29ஆம் தேதி முதல் இந்த ரயில் சேவை முழுமையாக தொடங்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹரித்வார், ரூர்க்கி, சஹாரன்பூர், முசாபர்நகர் மற்றும் மீரட் ஆகிய ஐந்து ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், இன்று டேராடூனில் இருந்து டெல்லி செல்லும் நாட்டின் 17ஆவது வந்தே பாரத் ரயில் சேவையை காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 

இதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவை பார்க்கவும், இந்தியாவின் சாராம்சத்தைப் புரிந்துகொள்ளவும் உலக நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள்  இந்தியா வர விரும்புவதாக கூறினார். அத்தகைய சூழ்நிலையில் உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களுக்கு சிறந்த வாய்ப்புகள் உள்ளன என்றும், வந்தே பாரத் ரயில் இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள உத்தரகாண்டிற்கு உதவப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் நாட்டை ரயில் பாதை மூலம் இணைக்கும் முயற்சி சிறப்பாக நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com