பி.எம். கேர்ஸ் திட்டத்தின் கீழ், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உறைவிட வசதி அளித்தல், கல்வி உதவித் தொகை வழங்குதல், 23 வயது வரை 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்தல் மற்றும் மருத்துவ காப்பீடு மூலம் ஆரோக்கியத்தை உறுதி செய்தல் முதலியவை செயல்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில், இத்திட்டத்தின்கீழ் பள்ளிக்கு செல்வோருக்கு கல்வி உதவித்தொகையை பிரதமர் மோடி வழங்கினார். காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு உதவித்தொகையை வழங்கி உரையாற்றிய அவர், நோய் தொற்று உச்சத்தில் இருந்த காலத்தில் பி.எம். கேர்ஸ் நிதி பெரிதும் உதவியதாக கூறினார். கொரோனா சிகிச்சைக்கு என மருத்துவமனையை மேம்படுத்துவதற்கும், வென்டிலேட்டர்களை வாங்குவதற்கும், ஆக்ஸிஜன் ஆலைகளை அமைப்பதற்கும் பிஎம் கேர்ஸ் நிதி பெரிதும் உதவியதாகவும், இதனால் பல உயிர்களை காப்பாற்ற முடிந்ததாகவும் கூறினார்.
அப்போது பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு நிதியை வழங்க முடியுமே தவிர பாசத்தை வழங்க முடியாது என வேதனை தெரிவித்த அவர், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பாரத அன்னை துணையாக நிற்பார் எனவும் தெரிவித்தார்.