மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார்.
டெல்லியில் நாளை நடைபெற உள்ள பிரம்மாண்ட விழாவில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
சுமார் 96 ஆண்டுகள் பழமையான தற்போதைய நாடாளுமன்ற வளாகத்திற்கு மாற்றாக, நாட்டின் மக்கள் தொகை மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு கடந்த 2020 ஆண்டு டிசம்பர் மாதம் 10 தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் சுமார் ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடர்ந்து 28 மாதங்களில் சுமார் 66 ஆயிரம் தொழிலாளர்களின் உழைப்பில் இதன் கட்டுமானப் பணிகள் நடைபெற்றது.
புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை என ஒட்டுமொத்தாக, ஆயிரத்து 280 உறுப்பினர்கள் அமரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பழைய நாடாளுமன்ற மக்களவையில் 543 பேரும், மாநிலங்களவையில் 250 பேர் மட்டும் அமர முடியும் என்ற நிலையில், தற்போது இரு அவைகளிலும் கூடுதல் உறுப்பினர்கள் அமரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோல், பெரிய அளவிலான நூலகம், உணவகம், விரிவாக்கப்பட்ட வாகன நிறுத்தும் உள்ளிட்ட வசதிகள் நாடாளுமன்ற வளாகத்தில் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக நடைபெற உள்ள விழாவில் புதிய நாடாளுமன்றத்தை மோடி திறந்து வைக்க உள்ளார்.
மேலும் 75 ரூபாய் நாணயம் மற்றும் தபால் தலையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட உள்ளார். விழாவின் முக்கிய அங்கமாக சுதந்திரத்தின் போது ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக ஆங்கிலேயரிடம் இருந்து அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு பெற்றுக் கொண்ட செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நிறுவப்பட உள்ளது. இதற்காக தமிழ்நாட்டில் இருந்து சென்றுள்ள திருவாவடுதுறை ஆதினம், மயிலாடுதுறை, மதுரை உள்ளிட்ட 19 ஆதினங்கள், பிரதமரிடம் செங்கோலை வழங்க உள்ளனர்.
இந்த விழாவில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் உட்பட 25 அரசியல் கட்சிகள் பங்கேற்க உள்ளன. புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவையடுத்து நாடாளுமன்றம் அமைந்துள்ள சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன
முன்னதாக புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக, காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட், திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க் கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்தன. நாடாளுமன்றத்தின் அங்கமாக இருக்கக்கூடிய குடியரசுத் தலைவரை விழாவுக்கு அழைக்காததன் மூலம் மத்திய அரசு ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தி இருப்பதாகக் கூறி எதிர்கட்சிகள் விழாவை புறக்கணித்துள்ளன.