பீகாரில் மனிதக்கழிவுகளை மனிதனே அள்ளும் பணியைச் செய்து வந்த சிந்தா தேவி என்ற பெண் துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் பீகார் மாநிலம் கயாவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 40 ஆண்டுகளாக தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்த சிந்தா தேவி என்பவர் கயா தொகுதியில் துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் காய்கறி விற்று வந்த சிந்தா தேவி, சமீபகாலமாக மனிதக்கழிவுகளை அகற்றும் பணியை செய்து வந்தார். த்ற்போது அவர் துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதன் மூலம் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
கயா தொகுதியில் இதுபோன்று நடப்பது ஒன்றும் புதிதான ஒன்றல்ல. 1996 ஆம் ஆண்டு நிதிஷ் குமாரின் ஜனதா தளம் கட்சியிலிருந்து கல் உடைக்கும் தொழிலாளியான பகவதி தேவி என்ற பெண் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது. மேலும் இது குறித்து கயாவின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட கணேஷ் பாஸ்வான், கயா என்பது மக்கள் ஞானம் தேடும் இடம், மேலும் ஒரு முசாஹர் பெண் மக்களவைக்கு செல்லக்கூடிய இடமும் இதுதான். இந்த முறை இங்குள்ள மக்கள் சிந்தா தேவியைத் தேர்ந்தெடுத்ததன் மூலம், அநேகமாக முழு உலகிற்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்துள்ளனர். இங்கு கழிப்பறைகள் குறைவாக இருந்தபோது, தூய்மை பணியாளராக மனிதக்கழிவுகளை தலையில் சுமந்து வந்தார். இது வரலாற்று சிறப்புமிக்கது என கூறியுள்ளார். மேலும், சிந்தா தேவி தூய்மை பணியாளர் மற்றும் காய்கறி விற்பனையாளராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது தேர்தலில் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளார். நகர மக்கள் தாழ்த்தப்பட்டவர்களை ஆதரிப்பதாகவும், அவர்களை சமூகத்தில் முன்னோக்கி கொண்டு செல்லவும் பாடுபடுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
-- சுஜிதா ஜோதி
இதையும் படிக்க : இதுவரை இல்லாத அளவு இந்தாண்டு வழக்குகள் பதிவு - என்ஐஏ