ஜார்க்கண்டில் விஸ்வகர்மா சிலையை கரைத்தபோது நீரில் மூழ்கி சிறுமி உள்பட 7 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு, குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
நவராத்திரி கடைசி நாளில் சரஸ்வதி - ஆயுத பூஜை கொண்டாடுவதுபோல், வட இந்திய மாநிலங்களான, திரிபுரா, அசாம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் விநாயக சதுர்த்தி முடிந்த சில நாட்களுக்குப் பிறகு வெகு கோலாகலமாக வணங்கப்படும் ஆயுத பூஜை விழாவுக்கு விஸ்வகர்மா பூஜை என்று பெயர். புராண கால தேவலோகச் சிற்பி, சிறந்த கட்டடக்கலை நிபுணர், பொறியியல் வல்லுநர், தொழில் படைப்பாற்றலுக்கானத் தெய்வம் என அழைக்கப்படுபவர் விஸ்வகர்மா.
இந்தநிலையில், ஜார்க்கண்டின் லத்தேர் மாவட்டம், பிக்ரு கிராமத்தில் உள்ள குளம் ஒன்றில் நேற்று விஸ்வகர்மா சிலையை கரைத்தபோது சிறுமி உள்பட 7 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக பாலுமத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.