சமூகநீதி மாநாடு... ஒன்று சேரும் எதிர்க்கட்சிகள்...

சமூகநீதி மாநாடு... ஒன்று சேரும் எதிர்க்கட்சிகள்...

டெல்லியில் நாளை சமூக நீதி மாநாடு தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் பல மாநிலங்களின் முதலமைச்சர்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இது தொடர்பாக செய்தி, மக்கள் தொடர்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் "நாளை புதுடில்லி இந்திய கேட் பகுதியில் சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு நடைபெற உள்ளது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் பங்கேற்க உள்ளார். இதில் சிறப்பு விருந்தினராக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலர் டி.ராஜா சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசிய மாநாட்டு கட்சியின் கட்சி தலைவர் பாரூக் அப்துல்லா, திரிணாமுல் கட்சியின் டெரிக் ஓ பிரைன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்கள் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். 

தமிழ்நாட்டிலிருந்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது.
 
மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசின் திட்டங்களை இதுவரை தனித்தனியாக எதிர்த்து வந்த பல்வேறு எதிர் கட்சிகள் தற்போது ஒன்று சேர்ந்துள்ளன. எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகளின் கூட்டணி சேர்க்கையின் முக்கிய நகர்வாக இந்த சமூக நீதி மாநாடு அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.