”சுனக்கின் வெற்றி பாஜகவிற்கான பாடம்” முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம்!!

”சுனக்கின் வெற்றி பாஜகவிற்கான பாடம்” முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம்!!

இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகும் போட்டியில் ரிஷி சுனக் பெற்ற வெற்றியைப் பயன்படுத்தி பாஜகவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். 

முதல் இந்திய வம்சாவளி:

ரிஷி சுனக், கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் இங்கிலாந்தின் முதல் இந்திய வம்சாவளி பிரதமராக அக்டோபர் 28 அன்று பொறுப்பேற்கவுள்ளார்.

பிரதமராக பொறுப்பேற்பு:

42 வயதான சுனக், மன்னருடனான சந்திப்பிற்கு பிறகு இங்கிலாந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதில் மனைவி அக்ஷதா மூர்த்தி மற்றும் மகள்கள் கிருஷ்ணா மற்றும் அனுஷ்கா ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சுனக்கின் முதல் உரை:

"இங்கிலாந்து ஒரு சிறந்த நாடு. ஆனால் நாம் தற்போது ஆழ்ந்த பொருளாதார சவாலை எதிர்கொள்கிறோம் என்பதில் சந்தேகமில்லை" என்று  பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் அவரது முதல் உரையில் சுனக் கூறியுள்ளார்.

மேலும், "எங்களுக்கு இப்போது நிலைத்தன்மையும் ஒற்றுமையும் தேவை.  எங்கள் கட்சியையும் நாட்டையும் ஒன்றாகக் கொண்டுவருவதற்கு முன்னுரிமை அளிப்பேன். ஏனென்றால், நாம் எதிர்கொள்ளும் சவால்களை முறியடித்து, நமது குழந்தைகளுக்கும்,  சிறந்த, வளமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான ஒரே வழி இதுதான்" என்று தெரிவித்துள்ளார்.  

அதனைத் தொடர்ந்து, "நான் உங்களுக்கு நேர்மையுடனும் பணிவுடனும் சேவை செய்வேன் என்று உறுதியளிக்கிறேன். மேலும் இங்கிலாந்து மக்களுக்காக நான் நாள் முழுவதும் உழைப்பேன்" என்றும் சுனக் கூறியுள்ளார். 

தோல்விக்கு பின் வெற்றி:

இங்கிலாந்தில் வெள்ளையர் அல்லாத ஒருவர் அரசாங்கத் தலைவர் பதவியை வகிப்பது இதுவே முதல் முறை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் போரிஸ் ஜான்சன் பதவி விலகிய பிறகு, கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் மற்றும் பிரதமருக்கான போட்டியில் சுனக் போட்டியிட்டார்.

ஆனால் முன்னணியில் இருந்திருந்தாலும்  இறுதியில் லிஸ் ட்ரஸிடம் தோல்வியுற்றார். இருப்பினும், டிரஸ் நீண்ட காலம் ஆட்சி செய்ய முடியவில்லை.  பொருளாதாரத்தை கையாள்வது குறித்த அவர் மீதான விமர்சனங்களுக்குப் பிறகு பிரதமர் பதவியிலிருந்து விலகினார். 

ப. சிதம்பரம்:

இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகும் போட்டியில் ரிஷி சுனக் பெற்ற வெற்றியைப் பயன்படுத்தி பாஜகவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

”அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மக்கள் தங்கள் நாடுகளில் பெரும்பான்மை இல்லாத குடிமக்களை அரவணைத்து அரசாங்கத்தின் உயர் பதவிக்கு தேர்ந்தெடுத்துள்ளனர்.  இதில் இந்தியாவும் பெரும்பான்மைவாதத்தை கடைப்பிடிக்கும் கட்சிகளும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இருப்பதாக நான் நினைக்கிறேன்.” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   மீண்டும் மீண்டும் ஊழலில் சிக்கும் எதிர்க்கட்சிகள்...!!! பாஜகவின் திட்டம் என்ன?!!