குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், இந்தியாவின் இரும்பு மனிதர் நினைவாக கட்டப்பட்டுள்ள ‘சர்தார்தம் பவன்’ கட்டிடத்தை பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இதன் ஒரு பகுதியாக அங்கு மாணவிகள் விடுதி அமைக்கும் பூமி பூஜை நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றிருந்தார். அப்போது நாட்டு மக்களிடம் உரையாற்றிய அவர், செப்டம்பர் 11ம் தேதி உலகம் முழுவதும் நடந்த முக்கிய நிகழ்வுகளை நினைவு கூர்ந்து பேசினார்.
தமிழ் மொழி மிகவும் தொன்மையானது என குறிப்பிட்ட மோடி, அம்மொழிக்கு அளப்பெரிய தொண்டாற்றிய மகாகவி பாரதியாரின் நினைவு தினமும் இன்று தான் என கூறினார். அவரது நினைவாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில், தமிழ் ஆய்வு இருக்கை ஏற்படுத்தப்படும் என கூறினார். இது மாணவர்கள் மட்டுமல்லாது தமிழ் படிப்புகளில் ஆய்வு மேற்கொள்வோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார்.
முன்னதாக பாரதியாரின் 100வது ஆண்டு நினைவு நாளில் டிவிட்டரில் தமிழில் புகழஞ்சலி செலுத்தியிருந்த மோடி, பாரதியார் நாட்டிற்கு ஆற்றிய பன்முகப்பங்களிப்பு, சமூக நீதி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீதான நன்னெறிகளை நினைவு கூருவோம் என குறிப்பிட்டிருந்தார்.