முடிவிற்கு வந்த 17 நாள் போராட்டம்; 41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு!

உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் 17 நாட்களாக சிக்கி இருந்த தொழிலாளர்கள் 41 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி அருகே சில்க்யாரா பகுதியில் நான்கரை கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி அன்று அதிகாலை 5 மணி அளவில் திடீரென சுரங்கம் இடிந்து விழுந்தது. இதில்  41 தொழிலாளர்கள் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

இதையடுத்து பல்வேறு கட்ட மீட்பு பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவம் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். முதலில்  60 மீட்டர் தொலைவுக்கு 80 சென்டி மீட்டர்  விட்டம் கொண்ட குழாயைச் செலுத்தி தொழிலாளர்களை மீட்பதற்கான பணிகள் நடைபெற்றது. அப்போது 25 டன் எடைக் கொண்ட ஆகர் இயந்திரம் நிறுவப்பட்டுள்ள கான்கிரீட் தளத்தில் விரிசல் ஏற்பட்டதால், மீட்புப் பணிகள் தொடர்வதில் சிக்கல் நிலவியது.

பின்னர் விரிசல் சீர் செய்யப்பட்டு மீண்டும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் ஆகர் இயந்திரத்தின் பிளேடுகள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டது. இதனால் கிடைமட்டமாக குழாய் செலுத்தும் மீட்புப் பணிகள் முழுவதுமாக முடங்கியது.

மீதமுள்ள 10-12 மீட்டர் தொலைவுக்கு பணியாளர்களே நேரடியாக குழாயைச் செலுத்துவதற்கு இயந்திரத்தின் பிளேடை அகற்ற இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் கட்டுமானப் படைப்பிரிவைச் சேர்ந்த பொறியாளர்கள் குழு வீரர்கள் நிகழ்விடத்திற்கு விரைந்தனர்.

இதைத் தொடர்ந்து சுரங்கப் பாதை மணல் குவியலில் பக்கவாட்டில் தொடர்ந்து துளையிட டெல்லியில் இருந்து 24 சிறப்பு தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். மெலிந்த தேகம், உயரம் குறைவான இவர்கள் சமதளம், மலைப்பகுதியில் எலிவளை போல குடைந்து சிறிய அளவிலான சுரங்கம் தோண்டுவதில் வல்லவர்களாக இருந்ததால் 'எலி வளை' தொழிலாளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

தொடர்ந்து, இந்த ஊழியர்கள் மேற்கொண்ட நடவடிக்கையால் சுரங்கப் பாதையில் மேற்கொள்ளப்பட்டு வந்த பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்தது. 

இதையடுத்து துளையிடப்பட்ட பகுதியில் இருந்து பைப்  வழியாக ஸ்டெரசச்ர் மூலமாக தேசிய பாதுகாப்பு படையினர் சென்று தொழிலாளர்களை ஸ்டெக்சர் மூலம் 5 பேர் என்ற முறையில் அடுத்தடுத்து 41 பேரையும் பத்திரமாக மீட்டனர்.  சுரங்கத்தில் இருந்து 17 நாட்களுக்கு பிறகு வெளியே வந்த தொழிலாளர்களை அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, மத்திய அமைச்சர் வி.கே.சிங் உள்ளிட்டோர் ஆரத்தழுவி மகிழ்ச்சியுடன் வரவேற்றார். 

மீட்கப்பட்ட தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ்கள் மூலம் உத்தர்காசி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து சுரங்கத்தின் வெளியே நீண்ட நாட்களாக காத்திருந்த அவர்களது உறவினர்கள் இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com