நாடு முழுவதும் கொரோனா தொற்று விவரங்களை நாள்தோறும் வெளியிட்டு வரும் மத்திய அரசு, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4 ஆயிரத்து 41 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் தீவிர தொற்று பாதிப்புக்கு 10 பேர் பலியாகியுள்ளனர். நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 363 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 21 ஆயிரத்து 177 பேர் தொற்று பாதிப்புக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளீள்ல் 12.05 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதுவரை 193.83 கோடி தடுப்பூசிகள் டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனாவை போன்று தற்போது குரங்கு அம்மை நோயும் இந்திய மக்களை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. சர்வதேச அளவில் 30 நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் 550 பேருக்கு குரங்கு அம்மை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
இதனிடையே, குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புண்கள் குணமாகும் வரையிலோ அல்லது, உடலில் ஏற்பட்ட சிரங்குகள் காயும்வரையிலோ மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவேண்டும் என மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.