ஜம்முவில் தொடர்ந்து 4-வது நாளாக டிரோன்கள் பறந்ததை அடுத்து, இந்திய ராணுவம் முழு உஷார்நிலைப் படுத்தப்பட்டுள்ளது.
காஷ்மீரில் ஜம்முவில் உள்ள விமானப்படை தளத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் டிரோன்கள் மூலம் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தினர். பின்னர், அடுத்த 2 நாட்களும் ஜம்மு புறநகர்களான காலுசக், குஞ்ச்வானி ஆகிய இடங்களில் உள்ள ராணுவ தளங்கள் அருகே டிரோன்கள் பறந்தன. இந்தநிலையில், தொடர்ந்து 4-வது நாளாக டிரோன்கள் நடமாட்டம் காணப்பட்டது.
காலுசக்கில் உள்ள ராணுவ தளத்தின் மீது ஒரு டிரோன் பறந்ததை ராணுவ வீரர்கள் பார்த்தனர். ஒரு மணி நேரம் கழித்து, குஞ்ச்வானி பகுதியில் உள்ள விமானப்படை சிக்னல் கோபுரத்துக்கு மேலே 800 மீட்டர் உயரத்தில் மற்றொரு டிரோன் பறந்தது. இதையடுத்து, அப்பகுதிகளில் முழு உஷார்நிலை பிறப்பிக்கப்பட்டது.