வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வழியாக ஊடுருவல் முயற்சியை முறியடித்த பாதுகாப்புப் படையினர்.
வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் தங்தார் பகுதியில் ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்களை கடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ராணுவப் பிரிவு ஊடுருவல் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இந்நிலையில் சத்போரா பகுதியில் நள்ளிரவில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கையை கண்டறிந்தது பாதுகாப்பு படை.
அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் அத்துமீறி நுழைந்த நபரை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதி லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதியிடம் இருந்து ஏகே ரக துப்பாக்கியும் கைத்துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளது. அவரிடமிருந்து பாகிஸ்தான் ரூபாய் நோட்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.