மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க.வு.க்கு இடம் கிடைக்குமா..? மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம்...

பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு முதல்முறையாக மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. 
மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க.வு.க்கு இடம் கிடைக்குமா..? மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம்...
Published on
Updated on
1 min read
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி 2 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்ட நிலையில், இதுவரை மத்திய அமைச்சரவையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 81 உறுப்பினர்களைக் கொண்ட மத்திய அமைச்சரவையில் தற்போது 53 அமைச்சர்கள் மட்டுமே உள்ளனர். அதாவது மேலும் 28 அமைச்சர்களைச் சேர்க்கலாம். இந்நிலையில், வரும் 13ஆம் தேதி தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக அமைச்சரவையை மாற்றி அமைக்க முடிவுசெய்த பிரதமர் மோடி, இதுகுறித்து கடந்த 3 நாட்களாக பாஜக மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக ஜூலை 8ஆம் தேதி அமைச்சரவை மாற்றம் செய்யப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதனிடையே, மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட் கர்நாடக ஆளுநராக நியமிக்கப்பட்டதால், மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுவது உறுதியானது. 
இந்த நிலையில், இன்று மாலையே அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், ஜோதிராதித்ய சிந்தியா, சர்பானந்த சோனாவால் உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுவரையில் இல்லாத அளவுக்கு அமைச்சரவையில் இளம் வயதினருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும், விரைவில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அந்த மாநிலங்களுக்கு மத்திய அமைச்சரவையில் கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. தமிழகத்தில் பாஜக கூட்டணியில் உள்ள அ.தி.மு.க.வுக்கும் அமைச்சர் பதவி கிடைக்குமா? எனத் தெரியாத நிலையில், அமைச்சர் பதவியில் சரியாக செயல்படாத சிலரை நீக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. குடியரசுத் தலைவர் மாளிகையில் மாலை 6 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. 
logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com