பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்துவுக்கும் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங்கிற்கும் வெகு காலமாக மோதல்போக்கு நிலவி வந்தது. இருவரும் பொதுவெளியில் ஒருவரையொருவர் மாறிமாறி விமர்சித்து வந்தனர். இந்நிலையில்
தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் தனது வீட்டில் ஆலோசனை நடத்திய அமரீந்தர் சிங், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். சண்டிகரில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற அவர், தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் பதவி விலகுவது குறித்து காங்கிரஸ் தலைவரிடம் ஏற்கனவே தகவல் தெரிவித்து விட்டதாகக் கூறினார். மேலும் தனக்கு தகவல் தெரிவிக்காமல் மூன்றாவது முறையாக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்டியுள்ளதாகவும் அதனால் தான் மனவேதனை அடைந்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து சண்டிகரில் உள்ள அக்கட்சி தலைமையகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அமரீந்தர் சிங் ஆதரவு எம்.எல்.ஏக்கள் உள்பட 75 பேர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கின் சிறப்பான செயல்பாடுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்கு அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.