ஆன்லைன் உணவு வர்த்தகத்தில் இந்தியாவில் முன்னணியில் இருப்பது ஜோமாட்டோ நிறுவனம்.
இதில் ஏராளமான இளைஞர்கள் டெலிவரி பாய்களாக வேலை செய்து வரும் நிலையில் அவர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கப்படுவதாகவும், மனிதாபிமானமற்று வேலை வாங்கப்படுவதாகவும், அவர்கள் சுய கவுரவத்தை இழந்து வேலை செய்வதாகவும் ஒரு சாரார் குறை கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் பாலிவுட் பிரபலங்களான ரித்திக் ரோஷன், கத்ரீனா கைஃப் ஆகியோரை வைத்து எடுக்கப்பட்ட ஜொமாட்டோ விளம்பரத்தை இணையத்தில் பலர் வசைபாடி வருகின்றனர். அதில் நடிகை கத்ரீனா தனது பிறந்தநாளுக்காக கேக் தருகிறேன் காத்திருங்கள் என கூறி செல்ல டெலிவரி பாயோ அடுத்த ஆர்டருக்கான அவசர ஒலி கேட்டு கிளம்பி விடுகிறார்.
இதனை நெட்டிசன்கள், நீங்கள் கொடுக்கும் கேக்குக்காக காத்திருக்க வேண்டுமா என்றும், கேக்குக்காக 10 நொடிகள் கூட நிற்க நேரமின்றி டெலிவரி பாய்கள் வேலை வாங்கப்படுவதாகவும் கூறி இணையத்தில் டுவீட்டுகளை தெறிக்க விட்டனர்.
இதற்கு பதிலளித்துள்ள ஜொமாட்டோ நிறுவனம் எங்களது நோக்கம் சிலரால் தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் எங்கள் டெலிவரி ஊழியர்களின் மாண்பை உயர்த்தி காட்டும் நோக்கிலேயே விளம்பரம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளனர்.