மாதவிடாய் குறித்து குழந்தைகளுக்கு ஏன் சொல்லிக்கொடுக்க வேண்டுமா?  

மாதவிடாய் குறித்து குழந்தைகளுக்கு ஏன் சொல்லிக்கொடுக்க வேண்டுமா?   

பெற்றோர்களேஎவ்வளவுதான் குழந்தைகளுடன் பிணைப்பாக இருந்தாலும், சில விஷயங்களை குழந்தைகளிடம் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். இதில் ஒரு விஷயம் கவனிக்கப்பட வேண்டும். அதாவது, மாதவிடாய் குறித்து குழந்தைகளுக்கு புரியவைப்பது மிக முக்கியமான ஒன்று. அதனை வளர்ச்சிக்குரிய ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். நம் உடம்பில் ஏற்படக்குரிய இயற்கையான மாற்றங்கள் மிக இயல்பான ஒன்று. இதில் இக்காலத்தில் பெண் குழந்தைகள் மிக வேகமாக தங்கள் பருவமடையும் வயதை எட்டிவிடுகின்றனர். முன்பெல்லாம் 13 வயதிற்கு பிறகு என்ற நிலை மாறி, தற்போது வாழ்வியல் மாற்றங்களால் 8 முதல் 10 வயதிலேயே பருவமடைந்து விடுகின்றனர். பருவமடையும் வயது என்பது பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல ஆண் குழந்தைகளுக்கும்தான். உடல்ரீதியாக பல மாற்றங்களை அந்த வயதில் அவர்கள் சந்திக்கின்றனர். எனவே, எவ்வளவு விரைவாக முடியுமோ விரைவில் அவர்களிடம் பகிர்ந்துகொள்வது புரிதலுக்கு வழிவகுக்கும்.

முதலில், அது நம் உடம்பில் நிகழும் ஒரு சாதாரண உயிரியல் முறை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இதில் கூச்சமடைய தேவையில்லை. முதலில் பெற்றோர்கள் இதை பற்றி புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், பெற்றோர்கள் இயல்பாக இருந்தால்தான் அவர்களது குழந்தைகளுக்கு கற்பிக்க முடியும். ஒருவரின் உடம்பில் நிகழும் பருவ மாற்றங்கள் குறித்து சித்திரங்கள் வடிவத்திலும் கூறலாம். அதாவது, பருவமடைதல் என்றால் என்ன? உடம்பில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்? மாதவிடாய் எப்படி நிகழ்கிறது? இரத்தப்போக்கு எப்படியானது? அந்த நேரத்தில் நம்மை எவ்வாறு தற்காத்துக்கொள்ள வேண்டும்? என்பது போன்ற விஷயங்களை நிதானமாக குழந்தைகளுக்கு எடுத்து கூறவேண்டும்.

உதாரணத்திற்கு, சானிடரி நாப்கினை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பது பற்றி கூறவேண்டும். ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தை பருவ வயதை எட்டுகிறதா என்பது முன்கூட்டியே தெரிந்துவிடும். குழந்தைகளின் உடலில் ஏற்படும் மாற்றங்கள், ரோமங்கள் அதிகமாக வளர்தல், மார்பக வளர்ச்சி போன்றவை எல்லாம் அறிகுறிகள். இதையெல்லாம் முன்கூட்டியே குழந்தைகளிடம் கூறவேண்டியது பெற்றோரின் கடமை. இந்த வயதை எட்டிவிட்டால் குழந்தைகளிடம் பருவம் குறித்து நீங்கள் பகிர வேண்டிய நேரம் வந்துவிட்டது என எடுத்துக்கொள்ளலாம்.

பொதுவாக குழந்தைகளிடம் அவர்களுக்கு புரியும் விதத்தில் பொறுமையாக கூற வேண்டியுள்ளது. கோபமோ, வெறுப்புடனோ புரிய வைக்க முயன்றால் அதற்கு பலன் இல்லை. எனவே, இரத்தத்தை பார்த்து பயப்படத் தேவையில்லை என்பதை  முதலில் புரிய வைக்க வேண்டும். இரத்தப்போக்கு என்பது கெட்ட விஷயமல்ல. எல்லோருக்கும் வரக்கூடியது என்று சொல்ல வேண்டும். சில குழந்தைகள் இவை பற்றி அறியாமல் அச்சம் கொள்ள வாய்ப்புகள் உண்டு. எனவே அவற்றை தவிர்க்க பெற்றோர்கள் முன்கூட்டியே பகிர்வது அவசியமாகும். பெண் குழந்தைகள் மட்டுமல்ல, ஆண் குழந்தைகளுக்கும் உடல்நிலை மாற்றங்கள் பற்றி கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.