"கணவர் உயிரிழந்தால் பூ, பொட்டு துறக்க தேவையில்லை" பூச்சூடிய கைம்பெண்கள்!

"கணவர் உயிரிழந்தால் பூ, பொட்டு துறக்க தேவையில்லை" பூச்சூடிய கைம்பெண்கள்!
Published on
Updated on
2 min read

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே செம்பனார்கோவிலில் கைம்பெண்கள் மாநாடு; 500-க்கும் மேற்பட்ட கைம்பெண்கள் பங்கேற்ற மாநாட்டில் ஏராளமான பெண்கள் தன்னார்வமாக முன்வந்து தலையில் பூச்சூடி, நெற்றியில் திலகமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

செம்பனார்கோவிலில் உலக கைம்பெண்கள் தினத்தை முன்னிட்டு, விதவைப் பெண்கள் வாழ்வுரிமை சங்கம் சார்பில் "வலிகளை வலிமைகளாக மாற்றுவோம்" என்ற தலைப்பில் கைம்பெண்கள் மாநாடு நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் கஸ்தூரி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் 'வாழ்ந்து காட்டுவோம்' திட்ட மாவட்ட செயலாளர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விதவைப் பெண்களுக்கு வழங்கப்படும் அரசின் நல திட்டங்களை விளக்கி பேசினர்.

இந்த மாநாட்டில், பெண்கள் திருமணம் ஆவதற்கு முன்பாகவே பூவையும் பொட்டினையும் அணிகின்றனர். திருமணம் ஆனதற்குப் பிறகு அவர்கள் புதிதாக அணிந்து கொள்வது தாலியும், மெட்டியும் மட்டுமே. எனவே திருமணம் ஆனதற்கு பிறகு கணவர் உயிரிழந்துவிட்டால், பெண்கள் திருமணத்திற்கு முன்பு இருந்தே அணிந்து வரும் பூவையும், பொட்டையும் துறக்க தேவையில்லை என்பதை வலியுறுத்தும் விதமாக, மாநாட்டு பந்தலில் சபையின் நடுவில் வைக்கப்பட்ட பூ மற்றும் பொட்டினை கைப்பெண்கள் பலர் தன்னார்வமாக முன்வந்து தலையில் பூச்சூடி, நெற்றியில் பொட்டு வைத்து சமுதாயத்தில் உள்ள மற்ற கைம்பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

விதவை என்ற வார்த்தையில் கூட பொட்டு இல்லை என்பதால் தான் அந்த வார்த்தையை கைம்பெண் என முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தமிழ்படுத்தியதை மேடையில் நிர்வாகிகள் நினைவு கூர்ந்தனர். இந்த மாநாட்டில் கைம்பெண்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com