திருவண்ணாமலை :  இயற்கை விவசாயிகள் சார்பில் மரபு விதை திருவிழா..!

திருவண்ணாமலை :  இயற்கை விவசாயிகள் சார்பில் மரபு விதை திருவிழா..!
Published on
Updated on
2 min read


திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் மரபு விதை திருவிழா நடைபெற்றது. மரபு விதை திருவிழாவில், 70-க்கும் மேற்பட்ட திறந்தவெளி அரங்குகளில் வெள்ளை கேழ்வரகு, சிறுதானியங்கள் மூலம் செய்யப்பட்ட சிற்றுண்டி உணவுகள், இட்லி பொடி உள்ளிட்டவை இயற்கை விவசாயிகளால் விற்பனை செய்யப்பட்டன. 

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பாக மரபு விதை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விதை திருவிழாவில் திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இயற்கை விவசாயிகள் 70க்கும் மேற்பட்ட திறந்தவெளி அரங்கம் அமைத்து இயற்கை விவசாயத்தின் மூலம் விளைவிக்கப்பட்ட விதை பயிர்களை பார்வைக்காகவும், விற்பனைக்காகவும் வைத்துள்ளனர். காலை முதல் இன்று மாலை வரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விதை திருவிழாவில் கலந்து கொண்டு பாரம்பரிய விதை பயிர் வகைகளை வாங்கி பயனடைந்து வருகின்றனர்.

இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 70 திறந்தவெளி அரங்குகளில் கந்தசாலா, பவானி, கிச்சடிசம்பா, தங்க சம்பா, பனிபயிர், கருப்புகவுனி, காட்டுயானம், ஆத்தூர் கிச்சடி, இலுப்பை சம்பா உள்ளிட்ட நெல் பயிர் வகைகள், திணை, வரகு, வெள்ளை கேழ்வரகு, சாமை போன்ற அரிசி வகைகள், சிறுதானியங்கள் மூலம் செய்யப்பட்ட சிற்றுண்டி உணவுகள், கலப்படமற்ற உணவு எண்ணெய், மலைத்தேன், கீரை காய்கறி விதைகள், இயற்கை பெருங்காயம் ஊறுகாய், சிறுதானிய காபி பொடி, இட்லி பொடி உள்ளிட்டவை இயற்கை விவசாயிகளால் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இயற்கை விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாகவும் அவர்களுக்கு சந்தை வாய்ப்பு ஏற்படுத்தி தரும் நோக்கத்துடனும் இந்த மரபு விதை திருவிழாவானது நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் தங்களின் நோய்களுக்காக மருத்துவமனைக்கு சென்று செய்யப்படும் செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை முற்றிலும் குறைக்கும் நோக்கில் இந்த இயற்கை மரபு விதை மூலம் பயிற்று உணவினை பயன்படுத்துவதன் மூலம் நோய்களிலிருந்து விடுபட முடியும் என்பதை பொதுமக்களுக்கு உணர்த்தும் விதமாகவும் இந்த மரபு விதை திருவிழா நடத்தப்பட்டு வருவதாக இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

இயற்கை விவசாயிகளுக்கான சந்தை வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதை இந்த மரபு விதை திருவிழா நடத்தப்பட்டதின் முக்கிய நோக்கமாக கூறப்படுகிறது. ஏராளமான பொதுமக்கள் குழந்தைகளுடன் குடும்பத்துடன் மற்றும் நண்பர்களுடனும் வந்து விதை திருவிழாவில் அனைத்து ஸ்டால்களிலும் தங்களுக்கு தேவையான விதவைகளை ஆர்வமுடன் பார்த்து வாங்கி சென்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com