பதவியை ராஜினாமா செய்த 5 மாநில மத்திய அமைச்சர்கள்...!

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற மத்திய அமைச்சர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததை அடுத்து, மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. தெலுங்கானாவில் காங்கிரசும், மிசோரம் மாநிலத்தில் சோரம் மக்கள் இயக்கமும் ஆட்சியை கைப்பற்றின. 

இந்த தேர்தலில், மத்திய அமைச்சர்களாக இருந்த சிலரும், எம்.பி.க்கள் சிலரும் போட்டியிட்டனர். இவர்களில் மத்திய அமைச்சர்கள் நரேந்திரசிங் தோமர், பிரகலாத்சிங் பட்டேல், ரேணுகா சிங் உட்பட 12 பேர் வெற்றி பெற்றுள்ளனர். 

இதனையடுத்து, தங்களது பதவிகளை மூவரும் ராஜினாமா செய்தனர். இதேபோல், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராகேஷ் சிங், உத்ய பிரதாப் சிங் மற்றும் ரித்தி பதக், ராஜஸ்தானை சேர்ந்த கிரோடி லால் மீனா, தியா குமாரி மற்றும் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், சத்தீஸ்கரை சேர்ந்த கோமதி சாய், அருண் சாவ் ஆகியோரும் தங்களது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் சிங் படேல் மற்றும் ரேணுகா சிங் ஆகியோரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உடனடியாக ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சராகவும், ஷோபா கரந்த்லாஜே உணவு பதப்படுத்துதல் தொழில்துறையின் இணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் இணை அமைச்சராக ராஜீவ் சந்திரசேகரையும், பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சராக பார்தி பிரவின் பவாரையும் நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.