வங்கக் கடலில் புயல் உருவாவதில் தாமதம்...!

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 48 மணி நேரத்திற்குப் பிறகே புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி உள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நாளை காற்றுழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பின், வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 1-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

இதையும் படிக்க : ED அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதிப்பு - உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

இதன் காரணமாக இன்றும், நாளையும் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், வரும் 30-ந் தேதி முதல் டிசம்பர் 1-ம் தேதி வரை தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த புயலுக்கு மியான்மர் சார்பில் பரிந்துரை செய்யப்பட்ட 'மிக்ஜாம்' என்ற பெயர் சூட்டப்பட உள்ளது

இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, டிசம்பர் ஒன்றாம் தேதிக்குப் பிறகே புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்துள்ளது. 

இதனிடையே, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 10 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.