

உலகளாவிய சவால்களை எதிர்த்துப் போரிடும் வகையில் வங்கிகளை வலுப்படுத்த இணைந்து பணியாற்றுவது அவசியம் என்று ஜி 20 நிதியமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்களின் முதல் ஜி20 கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று தொடங்கியது. பெங்களூருவில் நடைபெறும் இந்த மாநாட்டில் சக்திதாஸ் காந்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் காணொலி வாயிலாக பங்கேற்ற பிரதமர் மோடி, இந்திய நுகர்வோரும் உற்பத்தியாளர்களும் எதிர்காலம் குறித்து பெரும் நம்பிக்கையுடன் உள்ளதாக தெரிவித்தார். கொரோனாவால் உலகப் பொருளாதாரம் கடும் நெருக்கடியை சந்தித்ததாகவும், பல நாடுகளில் நிதி நம்பகத்தன்மை, அதிகப்படியான கடனால் அச்சுறுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து உலகப் பொருளாதார வீழ்ச்சியை மீட்டெடுக்கும் வகையில் இக்கூட்டம் இருக்க வேண்டும் என வலியுறுத்திய பிரதமர், நாட்டின் டிஜிட்டல் பரிவர்த்தனைகள், வாழ்வின் பல்வேறு படிநிலைகளை எளிமையாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.