கனமழையால் சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம்...புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரியில் கனமழையால் சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

கனமழையால் சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம்...புதுச்சேரி  முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி கூறுகையில்,

புதுச்சேரியில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மொத்தம் உள்ள 84 ஏரிகளில், 54 ஏரிகள் முழு கொள்ளவை எட்டியுள்ளதாகவும், மீதமுள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பும் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

வழக்கமாக ஆண்டுக்கு சராசரியாக 134 செ.மீ மழை பெய்யும் நிலையில், இந்தாண்டு வழக்கத்திற்கு அதிகமாக 184 செ.மீட்டர் மழை பெய்துள்ளதாக தெரிவித்த அவர், இந்த கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  25 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் கூறினார்.

சேதமடைந்த 25 வீடுகளுக்கு தலா ரூ.25 ஆயிரமும், பாதிக்கப்பட்ட விளைநிலங்களில் ஹெக்டர் ஒன்றுக்கு ரூ. 20 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என தெரிவித்த முதலமைச்சர் ரங்கசாமி,  கனமழை மற்றும் வெள்ளத்தால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கட்டுமானத்தொழிலாளர்கள்  மற்றும் மீனவர்களின்  குடும்ப அட்டைக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மழை பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருவதாகவும், மத்திய அரசிடம் இருந்து உரிய இழப்பீடு கேட்கப்படும் எனவும்  கால்நடை உயிரிழப்புகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி மாடுகளுக்கு ரூபாய் 10 ஆயிரமும் ஆடுகளுக்கு ரூ. 5 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என தெரிவித்தார்.