FREE FIRE கேமிங்காக உயிரை மாய்த்துக் கொண்ட சிறுவன்...மன உடைச்சலில் எடுத்த விபரீத முடிவு!!

FREE FIRE விளையாட்டிற்கு அடிமையான சிறுவன் மத்திய அரசின் முடிவால் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது.

FREE FIRE கேமிங்காக உயிரை மாய்த்துக் கொண்ட சிறுவன்...மன உடைச்சலில் எடுத்த விபரீத முடிவு!!

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களின் முழுநேரத்தையும் இணையத்திலேயே செலவிடுகின்றனர். அதிலும் இளசுகள் வெளியில் விளையாடுவதையே மறந்து கையில் இருக்கும் ஸ்மார்ட் போன்களில் உள்ள கேமிங்கில் மூழ்கி விட்டனர். இதன் பின்விளைவு மிக மோசமானதாக இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளாமல் ஒரு சிலர் இதற்கு அடிமையாகி விட்டதோடு மட்டுமில்லாமல், ஒரு சிலர் பல மனநோய்களாலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன்காரணமாக நிறைய உயிரிழப்புகளும் நடந்துள்ளது. அந்த வகையில் தற்போது பள்ளி மாணவர் ஒருவர் ஆன்லைன் கேமிங் பழக்கத்தால் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் மும்பையில் நிகழ்ந்துள்ளது.

மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு சுமார் 50 - க்கும் மேற்பட்ட செயலிகளுக்கு தடை விதித்தது. அதில் ஒன்று தான் அனைவருக்கும் பரிட்சையமான Free Fire கேமிங். சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த கேமிங்காக Free Fire இருந்து வந்தது. இந்நிலையில் மும்பையை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவன் ஒருவன் Free Fire-க்கு அடிமையாக இருந்து வந்துள்ளான். இதற்கிடையில் மத்திய அரசு இந்த கேமிங்கிற்கு தடை விதித்ததால், அந்த தடையை மீறி பல முறை பல விதமாக கேமை விளையாட முயற்சி செய்துள்ளான். ஆனால் ஒவ்வொரு தடவையும் அந்த சிறுவனின் முயற்சி தோல்வியில் முடிந்ததால், மாணவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். 

அந்த சமயத்தில், சிறுவனின் பெற்றோர் வெளியே செல்லவே, இடையில் மாணவனின் தந்தை செல்போன் வாயிலாக மகனிடம் ஒருமுறை பேசியுள்ளார். இதனைத்தொடர்ந்து சில மணிநேரம் கழித்து மீண்டும் அவர் மகனுக்கு அழைத்தபோது, சிறுவன் அழைப்பை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவசரமாக வீடு திரும்பி வந்து பார்த்தபோது சிறுவன் உயிரற்ற நிலையில் வீட்டில் கிடந்துள்ளான். உடனடியாக சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த போலீசார் நடத்திய விசாரணையில், FREE FIRE விளையாட்டிற்கு  சிறுவன் அடிமையானதால், மத்திய அரசின் தடைக்கு பிறகு கேமிங்-ஐ விளையாட முடியாமல் போனதால்  மன உடைச்சலில்  தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.