இந்தியாவில் உள்ள முக்கிய பிரமுகர்களை உளவு பார்த்த விவகாரத்தில் வெடித்தது புதிய சர்ச்சை...

இந்தியாவின் முக்கிய பிரமுகர்களின் கணினிகள் மற்றும் மொபைல் போன்கள் வேவு பார்க்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல், நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் உள்ள முக்கிய பிரமுகர்களை உளவு பார்த்த விவகாரத்தில் வெடித்தது புதிய சர்ச்சை...

இது தொடர்பாக 17 ஊடக நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வில், வேவு பார்ப்பதற்காக 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன் எண்கள் இருந்ததாகவும், அதில் பெரும்பாலானவை இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, மெக்சிகோ, ஹங்கேரி மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளை சேர்ந்தவை என்றும் கூறப்படுகிறது. 

குறிப்பாக இந்தியாவை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோரது செல்போன் எண்கள் இந்த பட்டியலில் உள்ளன. இதில் 2 அமைச்சர்கள், 3 எதிர்க்கட்சி தலைவர்கள், 40க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், நீதிபதிகள் ஆகியோரின் எண்களும் அடக்கம். சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் செயல்பாட்டாளர்களின் செல்போன் எண்களும் இந்த வேவு பார்ப்பதற்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த பெகாஸஸ் ஸ்பைவேர், கணினி மட்டுமின்றி மொபைல் போன்களிலும் கனகச்சிதமாக வேலை செய்யும். தனது செல்போன் ஹேக் செய்யப்படுவதை ஒருவருக்குத் தெரியாமலேயே, எந்த வித தடயமும் இன்றி அனைத்துத் தகவலையும் சேகரிக்கும் தொழில்நுட்பம் பெற்றது.

மொபைல் போன் பேச்சுகள், குறுஞ்செய்திகள், வாட்ஸ்அப் தகவல்கள், வாட்ஸ்அப் போன் கால்கள், கேமரா உள்ளிட்ட அனைத்தையும் துல்லியமாக தொலை நிலையில் இருந்து பெகாஸஸ் ஸ்பைவேர் மூலம் இயக்க முடியும்.எந்த நபரின் மொபைல் போனை ஹேக் செய்யவேண்டும் என்று தீர்மானித்த பின், போலி இணையதள இணைப்பை அந்த நபரின் வாட்ஸ்அப்புக்கு அனுப்பி, அதில் அவர்கள் உள்நுழைவதைக் கொண்டு அவர்களது செல்போனை ஹேக் செய்து விடுவர். 

இணையதள இணைப்பு மட்டுமன்றி, வாட்ஸ்அப்பில் மிஸ்ட் கால் கொடுத்தும் உள்நுழைந்து விடுவதோடு, அது எப்படி உள்நுழைந்தது என்று வந்த சுவடே தெரியாமல் அழித்து விடுகிறது.பேஸ்புக், ட்விட்டர் என்று சமூக ஊடகங்கள் மூலமும் உள்நுழையக்கூடிய இதன் தடத்தை அந்த சமூக வலைதள நிறுவனங்களாலும் கண்டுபிடிக்க முடியாது. மேலும், இந்த ஸ்பைவேரை தொடர்ந்து 60 நாட்கள் இயக்காமல் இருக்கும் பட்சத்தில் அது தானாக அந்த மொபைலில் இருந்து நீங்கிவிடும். 

50 பேரின் செல்போனை ஹேக் செய்ய கூடிய உரிமத்திற்கு, 50 முதல் 60 கோடி ரூபாய் வரை செலவாகும் என்று சொல்லப்படும் இந்த ‘பெகாஸஸ்’ ஸ்பைவேரை பெரு நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் மட்டுமே வாங்கமுடியம் என்பது நிதர்சனம். 40 நாடுகளைச் சேர்ந்த 60 அமைப்புகள் வாடிக்கையாளர்களாக உள்ளன. அமெரிக்காவைத் தவிர அனைத்து நாடுகளிலும் செயல்படும் இந்த மென்பொருள் எதிர்கட்சியினர் மற்றும் தீவிரவாதிகளின் நடவடிக்கையை கண்காணிக்க பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.