மக்களின் வரிப்பணத்தை எதிர்க்கட்சிகள் வீணடித்து விட்டன- அமைச்சர் அனுராக் தாக்கூர்

நாடாளுமன்றத்தில் பெண் எம்பிக்கள் தாக்கப்பட்டதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி முதலைக் கண்ணீர் வடிப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

மக்களின் வரிப்பணத்தை எதிர்க்கட்சிகள் வீணடித்து விட்டன- அமைச்சர் அனுராக் தாக்கூர்

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பெண் எம்பிக்கள் தாக்கப்பட்டதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ராகுல்காந்தி தலைமையில் பேரணியாக சென்று மாநிலங்களவை சபாநாயகர் வெங்கையா நாயுடுவிடம் புகாரளித்தனர்.

இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் புகாருக்கு விளக்கமளிக்கும் வகையில் மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அனுராக் தாக்கூர், எதிர்க்கட்சிகள் மக்களுடைய பிரச்சனையைப் பற்றிக் கவலைப்படாமல் வரிசெலுத்துவோரின் பணத்தை வீணடித்து விட்டதாகவும் குற்றம்சாட்டினார்.  

சில எம்பிக்கள் மேஜைகளின் மீது ஏறி ஆர்ப்பாட்டம் நடத்தியதை பெருமையாக கூறிக் கொள்வதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் மொபைல்போன்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், போனை எடுத்து வந்து படம் பிடித்ததுடன் அதனை பெருமையாக தங்களது டிவிட்டரில் பகிர்ந்ந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.