ராஜஸ்தான் தேர்தல் - காலை 11 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் சதவீதம்...!

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்று வரும் நிலையில், காலை 11 மணி நிலவரப்படி 24 புள்ளி 74 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்கள் இம்மாதம் நடைபெற்று வருகிறது. இதில் மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 3 மாநிலங்களுக்கு தேர்தல் முடிவடைந்துள்ளது. ராஜஸ்தானில் இன்றும், தெலுங்கானாவில் வரும் 30-ந் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகின்றன.

ராஜஸ்தானில் ஆட்சியை தக்கவைக்க ஆளும் காங்கிரசும், மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கு பாஜகவும் நேற்று முன்தினம் வரை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டன. மாநிலத்தின் மொத்தமுள்ள 200 தொகுதிளில் 199 இடங்களுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. கரன்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழந்ததால் அந்த தொகுதியின் வாக்குப்பதிவு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. 

இந்நிலையில், வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புகளுக்கிடையே தொடங்கியது. அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று மக்கள், வாக்களித்து தங்களது ஜனநாயக கடமைகளை நிறைவேற்றி வருகின்றனர். பதற்றமான வாக்குச் சாவடி மையங்களில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் நிறுவனத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆய்வு...!

முன்னாள் முதலமைச்சரும் பாஜக வேட்பாளருமான வசுந்தராராஜே ஜலாவர் வாக்குச்சாவடியிலும் முதலமைச்சர் அசோக் கெலாட் சர்தார்புரா வாக்குச்சாவடியிலும்  காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் ஜெய்ப்பூரிலும் வாக்களித்தனர். இதேபோல்,  மத்திய அமைச்சர்கள் கஜேந்திர சிங் ஷெகாவத் ஜோத்பூரிலும் அர்ஜூன் ராம் மேக்வால் பிகானீர் வாக்குச்சாவடியிலும் வாக்களித்தனர்.

மொத்தம் 2 ஆயிரத்து 605 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், 240 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது, 490 பேர் வாபஸ் பெற்றதால் 183 பெண்கள் உட்பட ஆயிரத்து 875 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலில் வாக்களிக்க 5 கோடியே 25 லட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தையும் நிறைவு செய்துள்ள நிலையில் அமைதியான வாக்குப்பதிவை உறுதி செய்ய தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப் பதிவில், காலை 11 மணி நிலவரப்படி 24 புள்ளி 74 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.