கடமைப் பாதையில் மூவர்ணக் கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர் முர்மு...

கடமைப் பாதையில் மூவர்ணக் கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர் முர்மு...

குடியரசு தினத்தையொட்டி டெல்லி கடமைப் பாதையில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பு  மரியாதையை ஏற்று  கொண்டார்.

தேசிய கொடியை ஏற்றிய குடியரசு தலைவர் :

நாட்டின் 74 வது குடியரசு தின விழா தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியா கேட் அருகே உள்ள போர் வீரர்கள் நினைவிடத்திற்குச் சென்று பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கடமைப்பாதையின் விஜய் சவுக் மாளிகை சந்திப்புப் பகுதிக்கு வருகை தந்த குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவை பிரமதர் மோடி வரவேற்றார். தொடர்ந்து இந்திய குடியரசு தினவிழாவில் முதன்முறையாக பங்கேற்ற எகிப்து அதிபர் அப்தல் ஃபெட்டா எல்-சிசி, ராணுவ மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். பின்னர், கடமைப்பாதையில் தேசிய கீதம் இசைக்க, ஜனாதிபதி திரவுபதி முர்மு, தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். திரெளபதி முர்மு குடியரசு தலைவராக பதவியேற்ற பிறகு கொடியேற்றும் முதல் குடியரசு தினம் இதுவாகும்.

குடியரசு தின அணிவகுப்புப் பேரணி:

கொடிவணக்கம் செலுத்தப்பட்டதையடுத்து, குடியரசு தின அணிவகுப்புப் பேரணி நடைபெற்றது. முதல் நிகழ்வாக பரம்வீர் சக்ரா மற்றும் அசோக சக்ரா விருது வென்றவர்களுடன் பேரணி தொடங்கப்பட்டது. முதன்முறையாக எகிப்து மற்றும் இந்திய ராணுவத்தினர் இணைந்து இசைக்குழுவுடன் குடியரசுதினப் பேரணியில் பங்கேற்றார். இதேபோல் முதன்முறையாக மகளிர் மட்டும் பங்கேற்ற மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் பேரணி நடைபெற்றது.

இதையும் படிக்க : 74 வது குடியரசு தினம்...தமிழ்நாட்டில் கோலாகல கொண்டாட்டம்...!

குதிரைப்படை கொண்ட, உலகின் ஒரே நாடு என்ற அடிப்படையில் குதிரைப்படை பேரணியும், இதைத்தொடர்ந்து ஒட்டகப் பேரணியும் நடைபெற்றது. இந்திய கடற்படை மற்றும் விமானப்படையினரின் அணிவகுப்புக்குப்பின் பல்வேறு மாநிலங்களின் கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் வாகன அணிவகுப்பு தொடங்கியது. அப்போது பெண்கள் முன்னேற்றத்தை வலியுறுத்தும் வகையில், அவ்வையார், வேலுநாச்சியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி உள்ளிட்டோரின் சிலைகளுடன் தமிழ்நாடு அணிவகுப்பு வாகனம் சென்றது.

இதைத்தொடர்ந்து உள்துறை அமைச்சகம், சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகளின் 6 அலங்கார ஊர்திகள் இடம்பெற்ற பேரணி நடைபெற்றது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய நடனங்களுடன் கலைநிகழ்ச்சிகள் தொடங்கி நடைபெற்றது.