தடுப்பணை கட்டும் கேரள அரசு...! தூங்கிக் கொண்டிருக்கும் விடியல் அரசு...!! த.பெ.தி.க கண்டனம்...!!!

தடுப்பணை கட்டும் கேரள அரசு...!  தூங்கிக் கொண்டிருக்கும் விடியல் அரசு...!!  த.பெ.தி.க கண்டனம்...!!!
Published on
Updated on
2 min read

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு கட்டும் தடுப்பணையை  உடனடியாக தமிழக அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகின்ற சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே உள்ள கூடுக்கடவு -சித்தூர் சாலையில் நெல்லிப்பதி என்ற இடத்தில் கேரள அரசு 5 அடி உயரத்தில் தடுப்பணை கட்டி 90 சதவீத பணிகள் முடித்து இருக்கின்றது. மேலும் 2 தடுப்பணைகளை கட்ட திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில், இதனை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சிறுவாணி அணையில் மழைக்காலங்களில் முழு கொள்ளளவான 52 அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்க விடாமல் கேரள அரசு தடுத்து வருகிறது. கோடை காலத்தில் வரக்கூடிய தண்ணீரையும் சிறுவாணிக்கு அணைக்கு வராமல் தற்போது தடுப்பணைகள் கட்டி வருகிறது. சிறுவாணி, பவானி ஆறுகள் காவிரி மேலாண்மை வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் கேரள அரசு காவிரி மேலாண்மை வாரியத்திடம் அனுமதி பெறாமல் சிறுவாணியில் தடுப்பணைகளை கட்டி வருகிறது. இதை தமிழக அரசு கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.'' என விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து, ''இந்த தடுப்பணைகளை தடுக்கா விட்டால் கோவை மாவட்டத்திற்கு முழுமையாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். ஏற்கனவே பவானி ஆற்றிலும் கேரள அரசு இதுபோன்ற தடுப்பணைகளை கட்டியுள்ளது. எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு சிறுவாணியில் கட்டப்படும் தடுப்பணைகளை தடுத்து நிறுத்திட வேண்டும். தூங்கிக் கொண்டிருக்கும் விடியல் அரசு இந்த விஷயத்தில் அலட்சிய போக்குடன் இருந்து வருவதால் கேரள அரசு தடுப்பணைகளை கட்டியுள்ளது'' என சாடியுள்ளார். 

மேலும், கேரள அரசானது திட்டத்தை கைவிடாவிட்டால் அனைத்து கட்சி இயக்கங்கள் மற்றும் பொதுமக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com