
மகாராஷ்ட்ராவில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால், இதுவரை 138 பேர் பலியாகியுள்ளனர். ராய்கட் மாவட்டத்தில் மட்டும் நிலச்சரிவுக்கு 36 பேர் பலியாகி உள்ளனர். கொங்கன் பிராந்தியத்தில் அதிதீவிர கனமழையால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சதார மாவட்டத்தின் பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அங்கு கனமழை மற்றும் நிலச்சரிவுக்கு இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாவட்டத்தின் அம்பேகரில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இதுவரை 8 பேரின் உடல்களை மீட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் இதுவரை 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தாழ்வான இடங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.பால்கர் மாவட்டத்தில் மின் இணைப்பை சரி செய்வதற்காக சென்று மின் கம்பிகளில் அந்தரத்தில் தொங்கிய இரண்டு பணியாளர்களை, அரைமணி நேரப் போராட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர்.
மாநிலம் முழுவதும் கனமழையால் ஆயிரம் வீடுகள் முற்றிலும் இடிந்துள்ளதாகவும், 5 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே கனமழையால் பாதிக்கப்பட்ட மகத் மற்றும் ராய்கட் மாவட்டங்களில் அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நேரில் ஆய்வு செய்தார்.