இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் முதல் குழந்தைகளுக்கு தடுப்பூசி?

குழந்தைகளுக்கு அடுத்த மாதத்திலிருந்து கொரோனா தடுப்பூசி செலுத்த வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் முதல் குழந்தைகளுக்கு தடுப்பூசி?

பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியது முதல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அவை நடவடிக்கைகளை புறக்கணித்து, தொடர் அமளியில் ஈடுபட்டு,  இரு அவைகளையும் முடக்கி வருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.  

தொடர்ந்து கொரோனா உள்ளிட்ட முக்கிய விவாகரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது பேசிய மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, 18 வயதுக்கு கீழானவர்களுக்கு வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தாக தெரிவித்தார். மேலும் அதற்கான முயற்சிகளும் நடந்து வருவதாக பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் கூறியுள்ளார்.

இதனிடையே குழந்தைகளுக்கு விரைவில் தடுப்பூசி செலுத்தும் முயற்சியை வரவேற்றுள்ள நிபுணர்கள், இது கொரோனா சங்கிலியை முறிக்க உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாது 3வது அலை எச்சரிக்கைக்கு இடையே பள்ளிகளை திறக்கவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறியுள்ளனர்.கடந்த மாதம், தேசிய நிபுணர் குழு தலைவர் என் கே அரோராவும், செப்டம்பர் மாதத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சைடஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என கூறியிருந்தார். 

இதேபோல் எய்ம்ஸ் தலைவர் ரந்தீப் குலேரியாவும்,  கோவாக்சின் தடுப்பூசியை பயன்படுத்தி குழந்தைகளுக்கு செலுத்துவதற்கான முயற்சி நடந்து வருவதாகவும், செப்டம்பர் முதல் தடுப்பூசி செலுத்தும் பட்சத்தில் கொரோனா சங்கிலியை உடைக்க பேருதவியாக இருக்கும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.