ராஜேந்திர பாலாஜியை கைது செய்வதில் அவசரம் காட்டியது ஏன்?..தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி.!

முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது விவகாரத்தில் இவ்வளவு அவசரம் காட்டியது ஏன் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ராஜேந்திர பாலாஜியை கைது செய்வதில் அவசரம் காட்டியது ஏன்?..தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி.!

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேட்டில் ஈடுபட்ட புகாரில் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்து இருந்த நிலையில் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இதற்கிடையில் கடந்த 20 தினங்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த ராஜேந்திரபாலாஜியை நேற்றையதினம் கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் வைத்து தமிழக காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

இச்சூழலில் அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரம் அரசியல் உள்நோக்கம் கொண்ட விவகாரமா என ஆரம்பத்திலேயே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு தமிழக அரசு நிச்சயமாக இல்லை என பதில் அளித்தது.

அப்போது குறுக்கிட்ட ராஜேந்திரபாலாஜி தரப்பு வழக்கறிஞர்,  இந்த வழக்கை காரணம் காட்டி தனது உறவினர்களும் தன்னை சார்ந்தவர்களும் தொடர்ந்து துன்புறுத்த பட்டதாகவும் நேற்றைய தினம் தான் கைது செய்யப்பட்டதற்கு பிறகு கூட தனது வழக்கறிஞர்கள் காவல்துறையினரால் கடுமையான முறையில் துன்புறுத்தப்படுவதாக கூறினார்.


அப்போது பேசிய தலைமை நீதிபதி, ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் இவ்வளவு அவசரம் ஏன் இந்த வழக்கை இன்று நாங்கள் விசாரிக்க இருந்தோம் அதற்குள் நேற்றைய தினம் அவரை கைது செய்வதில் எதற்காக இவ்வளவு அவசரமாக செயல்பட்டு உள்ளீர்கள் என கேள்வி எழுப்பினர். மேலும் கொரோனா பரவல் சூழலில் அனைத்து வழக்குகளையும் உடனடியாக நாங்கள் பட்டியலிட வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ராஜேந்திரபாலாஜி மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்து கொண்டே இருந்ததால் தான் நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று என கூறினர். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் ராஜேந்திரபாலாஜி தரப்பு வழக்கறிஞர்களை எல்லாம் என்ன காரணத்திற்காக துன்புறுத்தினீர்கள் என கேட்ட போது தனக்கு அது தொடர்பாக எதுவும் தெரியவில்லை என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டு தெரிவிப்பதாக தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.


இதனையடுத்து உத்தரவுகளை பிறப்பித்த தலைமை நீதிபதி தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்யக் கோரி ராஜேந்திரபாலாஜி தரப்பில் தொடரப்பட்ட மனுக்கள் மீது வரும் திங்கட்கிழமை பதிலளிக்குமாறு வழக்கு சார்ந்த அத்தனை ஆவணங்களையும் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.