கரையைக் கடக்கத் துவங்கியது ’குலாப் புயல்’

வங்க கடலில் உருவாகியுள்ள ’குலாப் புயல்’ வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளுக்கு இடையே கரையைக் கடக்கத் துவங்கியது.
கரையைக் கடக்கத் துவங்கியது  ’குலாப் புயல்’

ஆந்திராவின் கலிங்கப்பட்டிணத்திற்கு  கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் 85 கிலோமீட்டர் தொலைவிலும், ஒடிசாவின் கோபால்பூருக்கு தெற்கே 95 கிலோமீட்டர் தொலைவிலும் குலாப் புயல் மையம் கொண்டுள்ளது. மணிக்கு சுமார் 10 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வரும் இந்தப் புயல் தற்போது கரையைக் கடக்கத் துவங்கியுள்ளது. 

புயலின் மையப் பகுதி கரையைக் கடக்கும் போது மணிக்கு 95 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

பலத்த மழை எச்சரிக்கை காரணமாக ஸ்ரீகாகுளம் பகுதியில் தாழ்வான இடங்களில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.அம்மாநிலத்தின் விசாகப்பட்டினம், வைசாக் நகரம், ஸ்ரீகாகுளம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 

ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் 11 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும் பகுதிகளில் தேசியப் பேரிடர் மீட்பு படையினர் மற்றும் மாநில மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியுடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார். அம்மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய  மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com